
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்ரீயாக்கள் எவையும் இல்லை என்று கிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள தாவர தனிமைப்படுத்தல் சேவையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் உர மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த உரத்தை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வு அறிக்கை பின்னர் சீன கிங்டாவோ சீவின் பயோடெக் குழுவால் சவாலுக்குட்படுத்தப்பட்டது. இந்த விடயத்தை மூன்றாம் தரப்பினரான ஸ்கட்டர் குளோபல் இன்ஸ்பெக்ஷன் மற்றும் சர்வே நிறுவனத்துக்கு அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் உரங்களில் தீங்கு விளைவிக்கும் பக்ரீயாக்கள் இல்லை என்று கூறப்படுகின்றது.
கிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனம் இலங்கை ஊடகங்களுடன் பகுப்பாய்வு அறிக்கையைப் பகிர்ந்துள்ளது. நிறுவனம் வழங்கிய மாதிரிகளில் கோலிபார்ம் பக்டீரியா, சல்மோனெல்லா மற்றும் அஸ்காரிட் முட்டைகள் போன்ற தீங்கு விளைவிக்கும் எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஸ்கட்டரின் சோதனை அறிக்கை கூறுகிறது.
உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குத் அருகில் தரித்துள்ளது. அதேநேரம், 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு தரப்பட வேண்டும் என்று உர நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.





