புத்தளம் நகரில் கட்டாக்காலி மாடுகளால் தொல்லை

புத்தளத்தில் இரவு வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக வாகன சாரதிகளும், பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புத்தளம் – தில்லையடி பகுதிகளில் பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் அடிக்கடி விபத்துச் சம்பவங்களும் இடம்பெறுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் பிரதேச சபைகளுக்கு உட்பட்ட புத்தளம் நகர சுற்றுவட்டம், புத்தளம் – மன்னார் வீதி, தில்லையடி, ரத்மல்யாய ஆகிய பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வீதிகளில் சுற்றித்திரிவதாலும், வீதியின் நடுவே தரித்து நிற்பதாலும் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பயணிகளும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, உரிய பராமரிப்பு இன்றி, வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதிகளவில் அபராத தொகையும் விதிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, மாடுகளால் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் முழு சிகிச்சை செலவுகளையும் விபத்துக்கு காரணமான மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply