
பொருளியல் நிபுணர் கலாநிதி எஸ். கணேசமூர்த்தி
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளில் பெரும்பாலானது ஆரோக்கியமானவையாக இருந்தபோதும் நடைமுறைப் படுத்துவது கஷ்டமாக இருக்கும் என பொருளியல் நிபுணர் கலாநிதி எஸ் கணேசமூர்த்தி சுட்டிக்காட்டினார். போதியளவு நிதி கிடைக்கும் பட்சத்தில் நடைமுறைப்படுத்தக் கூடிய சாத்தியம் ஏற்படும் என்று கூறிய அவர், உட்கட்டமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நிதி மூலாதாரங்கள் சொல்லப்படவில்லை.
கிராமிய மக்களை மையப்படுத்திய நிதி ஒதுக்கீடுகளாக இருக்கின்றது என அவர் கூறினார்.நாட்டின் வருவாயைப் அதிகரித்துக் கொள்வதில் பல்வேறு சவால்கள் இருப்பதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நேரடி முதலீடுகள்வராமல் ஏற்றுமதி வருமானம் இல்லை. உல்லாசப் பயணத்துறை வீழ்ச்சி.வெளிநாட்டு கையிருப்பு குறைந்துள்ளது.உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட நெருக்கடிகள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய சவாலாக இருப்பதாக நிதி அமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இந்த சவால்களை எதிர்கொண்டு இந்த பட்ஜட் யோசனைகள் நடைமுறைப்படுத்துவதிலேயே வெற்றி தங்கியுள்ளதெனவும் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் காசு அனுப்புவதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதில் 2020இல் அதிகரிப்பு இருந்தது.ஆனால், உண்டியல் பரிமாற்றத்தால் 2021இல் வீழ்ச்சி காணப்படுவதாகவே தெரிகிறது. இதற்கு, டொலரின் வாங்கும் விலை மற்றும் விற்கும் விலைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் உண்டியல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவித்து இருக்கிறது. இதனால்,நாட்டுக்கான வருவாய் இழக்கப்படுகிறதென்றும் கலாநிதி கணேசமூர்த்தி கூறினார்.
நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி தொடர்பில் எதுவும் பட்ஜட்டில் சொல்லப்படவில்லை. இது சாதாரண மக்களின் எதிர்பார்ப்பை சங்கடப்படுத்தியிருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார்.வங்கிகள்,காப்புறுதி கூட்டுத்தாபனங்களுக்கு வரி விதிக்கும் தீர்மானம் மக்களைப் பாதிக்கும். மக்களை பாதிக்காத வகையில் வரிவிதிப்பு செய்வதாக நிதியமைச்சர் கூறினாலும், நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் திரு.கணேசமூர்த்தி கூறினார்.
ஓய்வூதிய வயதெல்லை 65ஆக அதிகரித்திருப்பது நல்லது. இது கடுமையாக ஆராய்ந்து அரசு செய்துள்ளது. சுமார் ஒரு இலட்சத்து 30,000 இளைஞர்கள் வெளிநாடு செல்லத் தயாரான நிலையில்,புதிய இளைஞர்களை அரச தொழில்களில் சேர்ப்பது சிரமத்தை ஏற்படுத்தும். இதனால்,ஓய்வூதிய வயது எல்லையை அரசு அதிகரிக்கிறது. புதியவர்களை சேர்த்து கொள்வதைவிடவும்பழையவர்களை சேவையில் வைத்திருப்பது இலாப ம் என்று அரசு கருதியுள்ளது போல் தெரிகிறது என கலாநிதி விளக்கினார்.
இந்த பட்ஜட்டில் இன்னும் ஒரு பிரச்சினை இருக்கிறது. துண்டு விழும் தொகை சொல்லப்படவில்லை. யோசனை முன்வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டாலும், எப்படி அதற்கான நிதி மூலங்களை பெறுவதென்பதும் சொல்லப்படவில்லை. இதனை ஒரு குறையாகவே பார்க்க முடிகிறது என்றும் திரு.கணேசமூர்த்தி கூறினார்.
இதைவிட,தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி மிகவும் ஆரோக்கியமானதென கூறும் இவர்,லயன் அறைகளுக்கு பதிலாக வீடுகளைக் கட்டிக்கொடுத்து அவர்களுக்கு புது வாழ்வை ஏற்படுத்தும் என்றும் விளக்கினார். மொத்தத்தில் கிராமிய பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் இலக்கு வைக்கப்பட்ட பட்ஜட் என்று கலாநிதி கணேசமூர்த்தி கூறினார்.






