
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்ட நிபுணர்கள் குழு நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது.
அமெரிக்காவின் விசேட அழைப்பை ஏற்று செல்லும் இவர்கள்,15ஆம் திகதி முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார்கள் என்று தெரியவருகிறது. இந்தக் குழுவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனும் சென்றிருக்கிறார்.
அமெரிக்கா செல்லும் குழுவினர் 20ம் திகதி அங்கிருந்து புறப்படுகிறார்கள். சுமந்திரன் தவிர்ந்த மற்ற இருவரும் இலங்கை திரும்புகிறார்கள். சுமந்திரன் அங்கிருந்து பிரித்தானியா செல்கிறார். அங்கு சில தனிப்பட்ட சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.
இந்த சந்திப்பிற்கு சுமந்திரன் தனியாகச் செல்வதாகவே முன்னர் திட்டமிட்டிருந்தார். எனினும், சாணக்கியனையும் அவர் உதவியாக அழைத்துச் செல்கிறார்.
சாணக்கியனிற்கு விசா வழங்குமாறு அவர் கோரியதையடுத்து, பிரித்தானியா தூதரகம் நேற்று முந்தினம் அந்த விசாவை வழங்கியது. கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு சென்ற சுமந்திரன், சாணக்கியன் பிரித்தானியா விசாவைப் பெற்றுக் கொண்டனர். இதன்போது பிரித்தானியா தூதருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து கனடா செல்லும் இருவரும் இங்கு தமிழ் அரசு கட்சியின் கனடா கிளையினருடன் கலந்துரையாடல்களை நடத்திவிட்டு 28ம் திகதி நாடு திரும்புவார்கள். இதேவேளை, சுமந்திரன் அமெரிக்கப் பயணம் பற்றி இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்திரிகை செய்திகள் வெளியான பின்னரே அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை அறிந்திருந்தனர்.
கட்சியின் முக்கிய எம்.பி களான சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்களும் பத்திரிகையைப் படித்தே தகவலை அறிந்து கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.






