சோமாலியாவாக மாறும் இலங்கை!

“எமது நாட்டை சோமாலியா நாடுபோல் ஆக்குவதற்கான வரவு – செலவுத் திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் தெளிவான திட்டங்கள், தீர்வுகள் என ஒன்றும் இல்லை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கபட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சஜித் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மக்கள் நலத்திட்டங்கள் அடங்கிய வரவு – செலவுத் திட்டமொன்றையே மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தெளிவற்ற வெற்று ஆவணமொன்றே நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை முகாமை செய்வதற்கான தெளிவான வழிகாட்டல்கள் இல்லை. குறுகிய மற்றும் நீண்டகால நோக்குகளும் உள்ளடக்கப்படவில்லை.
அதேபோல பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழிவகைகள் இல்லை. வரவு – செலவுத்திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கான வேலைத்திட்டமும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி, வெளிநாட்டு முதலீடுகளை, இருப்புகளை எவ்வாறு அதிகரிப்பது என்பன தொடர்பிலும் தெளிவு இல்லை. விவசாயிகளுக்கும் நேரடி பதில் கிடைக்கவில்லை.

எண்கணித மோசடிகளும் இடம்பெற்றுள்ளன. அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. இந்தநிலையில், சம்பள அதிகரிப்பு இல்லாமல் மக்கள் எப்படி வாழ்வது?. மக்கள் பற்றி சிந்திக்காத பாதீடு இது. அரசியல் கைக்கூலிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் கவனிப்புகள் இடம்பெற்றுள்ளன. நாட்டை வேகமாக வீழ்ச்சி பாதைக்கு அழைத்துச்செல்லும் பாதீடு இது. சுருக்கமாக சொல்லப்போனால் எமது நாட்டை சோமாலியாபோல் ஆக்குவதற்கான வரவு- செலவுத் திட்டமே இது. – என்றார்.

Leave a Reply