இலங்கையின் விவசாய அமைச்சிற்கு சீன நிறுவனம் விதித்துள்ள நிபந்தனைகள்

மாசுப்பட்ட சேதனப்பசளைகளுடன் இலங்கைக்கு கப்பலை அனுப்பியுள்ள, சீனாவின் சேதனப்பசளை உற்பத்தியாளர் நிறுவனமான கியுன்டோ பயோடெக் குருப் கொம்பனி லிமிடெட்( Qingdao Biotech Group Co. Ltd) தம்முடன் செய்துக்கொள்ளப்பட்ட அசல் கேள்விப்பத்திர உடன்படிக்கையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட விலையில் 70 சதவிகிதம் மற்றும் பசளைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்   என்று இலங்கையின் விவசாய அமைச்சகத்திற்கு  நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் சேதனப்பசளைகள் அடங்கிய சா்ச்சைக்குரிய கப்பலை, சீனாவுக்கு திருப்பியழைக்கவேண்டும் என்று இலங்கையின் அரசாங்கம் கோரி வருவதை அடுத்தே இந்த நிபந்தனைகளை சீன நிறுவனம் விதித்துள்ளது.

இதன்படி தம்முடன் செய்துக்கொள்ளப்பட்ட ஆரம்ப உடன்படிக்கையின் எழுபது சதவிகிதம் (5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்), பசளைகளுக்கான கட்டணமாக 36 மில்லியன் டொலர்கள் என்பவற்றை தமது செலுத்தவேண்டும் என்று சீன நிறுவனம் கோருகிறது.

இந்த நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் தமது ஏற்றுமதிகளின் மாதிரிகள், புதிய சோதனைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்றும் நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது.

இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு சீன நிறுவனத்தின் பணிப்பாளர் சொங் ஹாய் மெய்டோ( Song Hai Meito) நவம்பர் 9 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில் இந்த நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடிதத்தின் நகல் கொமர்ஷியல் பேர்டிலைசர்ஸ் லிமிடெட் மற்றும் சிலோன் பேர்டிலைசர் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று மாலை நிலவரப்படி, கொழும்பு துறைமுகத்தில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் களுத்துறைக்கு அருகில் 20,000 மெற்றிக் தொன் மாசுபட்ட பசளைகளை ஏற்றி வந்த ஹிப்போ ஸ்பிரிட் என்ற கப்பல் கண்காணிக்கப்பட்டது.

கடந்த வாரம், கப்பல் சிறிது நாட்கள் காணாமல் போன பிறகு கடல் ரேடார்களில் மீண்டும் அது கண்காணிப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் எதிா்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. 

Leave a Reply