நினைவேந்தல் நிகழ்வை நிறுத்துவதற்கோ மாற்றுவதற்கோ எமக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஆயர் இமானுவேல்

நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரைக்குமான நினைவேந்தல் நிகழ்வு தேசிய மட்டத்தில் நினைவு கூரும் விடயம். அதை யாரும் தடுக்க முடியாது. அதை நிறுத்துவதற்கோ மாற்றுவதற்கோ எமக்கு என்ன அதிகாரம் உள்ளது? எந்த வகையான அதிகாரமும் எமக்கு இல்லை என திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நவம்பர் மாதம் இறந்தவர்களை நினைவுகூரும் மாதமாக எமது திருச்சபையில் உள்ளது. அதனடிப்படையில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரால் இறந்து போனவர்களையும் அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்களாகிய நாம், நவம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமையை தீர்மானித்தோம்.

வடக்கு கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர் பேரவை தற்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்து வருகிறோம்.

அதனடிப்படையில் மேற்படி இறைவேண்டலை அறிவித்திருந்தோம். இம்முறை 20 ஆம் திகதி அந்த நினைவேந்தல் நாள் வருகின்றது.

இவ் விடயம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. எம்முடன் இதைப்பற்றி கலந்துரையாடாமல் தாமே முடிவெடுத்து பலர் கருத்துக்கள் தெரிவிப்பது வருத்தமளிக்கிறது. அவர்களே ஒரு விடயத்தை தீர்மானித்து அவர்களே அறிக்கை விடுகிறார்கள்.

நாம் அழைப்பு விடுத்தது கத்தோலிக்கர்களுக்கு மட்டுமே. விரும்பினால் ஏனைய மதத்தினரும் இணைந்துகொள்ள முடியும் என தெரிவித்திருந்தோம்.

நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரைக்குமான நினைவேந்தல் நிகழ்வு தேசிய மட்டத்தில் நினைவு கூரும் விடயம். அதை யாரும் தடுக்க முடியாது. அதை நிறுத்துவதற்கோ மாற்றுவதற்கோ எமக்கு என்ன அதிகாரம் உள்ளது? எந்த வகையான அதிகாரமும் எமக்கு இல்லை அதில் நாம் தலையிடவும் இல்லை. அதை தவிர்த்து இதைசெய்யுங்கள் என்றும் மக்களுக்கு நாம் சொல்லவில்லை அவ்வாறான சிந்தனையும் எமக்கு இல்லை.

நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி நடைபெறும் வழமையான நிகழ்வு நடந்தே தீரும் அதை மாற்ற நாம் முயலவும் இல்லை அதற்கு எமக்கு உரிமையும் இல்லை.

மே மாத முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்புவதாகவும் விமர்சித்தார்கள். அது அனைவராலும் முடிவுசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம். அதை மாற்ற நாம் சிந்திக்கவே இல்லை. அதே போல் நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான நாள் தேசிய தலைவரால் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட தினம் அதை நாம் ஏன் மாற்ற வேண்டும்.

அதற்கு பதிலாக 20 ஆம் திகதி நினைவேந்தல் செய்யவும் என்று நாம் கூறவில்லை. ஆலயங்களில் வழிபாடு செய்யுங்கள் என்றுதான் கூறினோம். 20 ஆம் திகதி கத்ததோலிக்கர்கள் நினைவேந்தல் செய்வதால் நவம்பர் 27 ஆம் திகதி வருடா வருடம் நடைபெறும் விடயங்கள் எந்த வகையிலும் மழுங்கடிக்கப்படாது. அந்த நோக்கம் எமக்கு இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

ஆயர் பேரவை தமிழ் மக்கள் சார்ந்து செயற்படுகிறது. மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறோம். கிறிஸ்தவர்கள் என வரும் போது பழிவாங்கும் எண்ணம் எமக்கு இல்லை.

ஒரு மனிதர் தமது தவறை உணர்ந்து செயற்படும் போது அதற்கு ஒப்புரவாகி சமாதானமாகத்தான் போக வேண்டும். ஆனால், சிலருடைய கருத்து சிந்தனை எல்லாம் எப்போதும் பழிவாங்க வேண்டும் என்பது தான்.

அதற்கு நாங்களும் உடந்தையாக இருக்க வேண்டும், இணங்கிப் போக வேண்டும், அவர்களின் சிந்தனையின் கீழ் நாம் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதன்படி செயற்பட எம்மால் முடியாது. கிறிஸ்தவ விழுமியங்கள், பண்புகள் உள்ளது. அதை மீறினால் கத்தோலிக்க ஆயர்கள் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.

எனவே, அதில் நாம் தொளிவாக இருக்கிறோம். அந்த பின்னணியில் நாம் தான் 20ஆம் திகதியை முடிவு செய்தோம். கத்தோலிக்கர்களுக்கு மட்டு அழைப்பு விடுத்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத வருட பிறப்பாக மாறும்! சம்பிக்க

Leave a Reply