
அம்பலாங்கொடை – தெல்துவவில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று (21) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது விருந்தகத்தின் மேல்மாடியில் 4 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீ-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த, கஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 35 வயதான இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அம்பலாங்கொடையில் ஒரு மாதத்திற்குள் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்கான காரணத்தை கண்டறியவும், சந்தேக நபர்களை கைது செய்யவும் விசாரணை நடைபெற்று வருகிறது.





