நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெறும் பொறுப்பற்ற செயற்பாடு – மக்கள் விசனம்!

நல்லூர் ஆலய சுற்று வீதியை அசுத்தப்படுத்தும் சிலருடைய பொறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் தினங்களில் சப்பைரதம், இரதோற்ஸவம், தீர்த்தோற்சவம் போன்ற திருவிழாக்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆலயத்திற்கு அதிகளவான பக்தர்கள் வருகைதர ஆரம்பித்துள்ளதுடன் நேர்த்திக்கடன் செலுத்திக் கொள்வதற்காகவும் அதிகளவான பக்தர்கள் அதிகாலையில் ஆலயத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் மாலை நேர திருவிழாவிற்காக வரும் பெரும் தொகையான பக்தர்களில் ஒருசிலருடைய பொறுப்பற்ற செயற்பாடுகள், ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களை முகம் சுழிக்க வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மாலை திருவிழாவிற்கு வருகைதரும் ஒருசிலர் ஆலயத்தின் வெளிவீதியில் அமர்ந்திருந்து கச்சான், கரம்சுண்டல், ஜஸ்கிறீம் போன்ற தின்பண்டங்களை உட்கொண்டுவிட்டு, கச்சான்கோது, கடதாசி கப், பை போன்ற கழிவுகளை அதிலே விட்டுச்செல்லும் செயற்பாடு இடம்பெற்றுவருகிறது.

இவ்வாறனவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள், ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களை முகம் சுழிக்க வைப்பதாக அமைகின்றது.

ஆலய நிர்வாகம் மற்றும் யாழ்.மாநகர சபையின் அறிவுறுத்தல்களையும் பொருட்படுத்திக் கொள்ளாமல், சிலருடைய இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அரங்கேற்றப்படுகின்றன.

எனவே ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் ஆலயத்தின் புனித பிரதேசங்களில் இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று நேர்த்திக்கடன்களை செலுத்துவோர் வலியுறுத்துகின்றனர்.

ஆலய சுற்று வீதிகள் யாழ்.மாநகர சபை சுத்திகரிப்பு பணியாளர்களால் தினமும் இரவு வேளைகளில் சுத்தம் செய்யப்படுகின்றது. அவ்வாறு சுத்தம் செய்யும் போது வீதிகளில் வீசப்பட்ட கச்சான் கோது, மிகுதி உணவுடன் வீசப்பட்ட பைகள் என்பன மணலில் புதைந்து காணப்படுவதனால் சுத்தம் செய்யும் போது சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஆலய வீதிகளில் பெருமளவான குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்குள் அவற்றை வீசாது ஆலய வீதிகளில் வீசி செல்பவர்களால் பக்தர்கள் உள்ளிட்ட ஆலயத்திற்கு வருவோர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வரும் ஒரு சில இளைஞர் குழுக்கள் அதிக சத்தம் எழுப்பும் கோர்ன்களை மக்கள் மத்தியில் ஊதி செல்கின்றனர். வயதானவர்கள் குழந்தைகள் மத்தியில் அதிக ஒலி எழுப்ப கூடிய அந்த கோர்ன்களை ஊதி செல்வதனால் பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அதேபோன்று கைக்குழந்தைகளுடன் சில பெண்கள் ஆலய சூழல்களில் யாசகம் பெற்று வருகின்றனர். அவர்களும் ஆலயத்திற்கு செல்வோருக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக யாசகம் பெறுகின்றனர். அத்துடன் ஆலய சூழலில் யாசகம் பெறும் சிலர் மது போதையில் யாசகம் பெற்று வருவதுடன் ஆலயத்திற்கு செல்வோருக்கு இடையூறுகளையும் விளைவித்து வருகின்றனர்.

இவ்வாறு ஆலயத்திற்கு வருவோருக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக செயற்படுவோருக்கு எதிராக பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரியுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply