மண்சரிவு ஆபத்தால் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 20 குடும்பங்கள்!

மண்சரிவு அடையாளங்கள் தென்பட்டதால், கொத்மலை கொட்டபிடிய கிராமத்தில் வசித்து வரும் சுமார் 20 குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கிராமத்தில் இருந்து தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கொத்மலை பிரதேச செயலகம், பிரதேச இராணுவ முகாமில் கட்டளை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று மண்சரிவு ஏற்படும் அடையாளங்கள் தென்பட்ட இடங்களை ஆய்வு செய்துள்ளனர்.

இந்த கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் நிலத்திலும் வீட்டு சுவர்களிலும் வெடிப்பு ஏற்பட்டதை அவதானிக்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொத்மலை நீர் தேக்கத்திற்கு மேல் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமம் மண்சரிவு ஏற்படும் ஆபத்துள்ள கிராமம் என அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அங்கிருப்பவர்களை நிரந்தரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Leave a Reply