நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு? மூடப்படும் சுத்திகரிப்பு நிலையம்!

கச்சாய் எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நாளை முதல் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆலையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்படுவது இதுவே முதல் முறை. இது சம்பந்தமாக நாளை பிற்பகல் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கச்சாய் எண்ணெயை ஏற்றிய கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இலங்கையை வந்தடையவுள்ளது.

அதுவரை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட நேரிட்டுள்ளதாக சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தொழிற்சங்க தலைவர் அசோக ரத்வல தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் வரும் கப்பலில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் கச்சாய் எண்ணெயே கொண்டு வரப்படுவதாகவும், அது 15 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது என்பதால், ஜனவரி மாத நடுப் பகுதியில் மீண்டும் ஆலையை மூட நேரிடும் எனவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை முதல் மூடப்படுவதால் எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

மசகு எண்ணெயை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுக்காமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேசத்தில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விநியோகத்தர்களின் பிரச்சினை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார்.

அரச ஊழியர்களை இழிவுபடுத்தும் அரசாங்கம்! எதிர்கட்சித் தலைவர் கண்டனம்

Leave a Reply