எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்துப்போட்டியிட வேண்டும்- இளைஞர் முன்னணி கோரிக்கை

எதிர்வரும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்களில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டியது அவசியம் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் புதிய செயலாளராக தெரிவு செய்யப்பட்ட சமன் குமார வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அனுராதபுர நிர்வாக சபை கூட்டம் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் தலைமையில், அனுராதபுரம் விமான நிலைய வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பிக்கு முன்னணி, இளைஞர் முன்னணி, விவசாயிகள் முன்னணி, ஆசிரியர் முன்னணி மற்றும் பெண்கள் முன்னணி ஆகியவற்றுக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் புதிய செயலாளராக தெரிவு செய்யப்பட்ட சமன் குமார கூட்டத்தில் நடுவே எழுந்து நின்று, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மீது நாங்கள் சிறுவயதிலிருந்தே அளாதி பிரியம் கொண்டவர்கள்.

கட்சியை பாதியில் விட்டுவிட்டு நாங்கள் செல்லவில்லை. அன்று ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுராதபுரத்துக்கு வருகைதந்தபோது துமிந்த சில்வாவை அரவணைத்து எம்மை சிறந்த முறையில் வழிநடத்துவதாகக் கூறிய வாக்குறுதியை நம்பி நாம் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளித்தோம்.

இன்று கிராமங்களிலும் பிரதேச சபைகளிலும், நாம் சேவை செய்யும் நிறுவனங்களிலும், இந்த சமூகத்திலும் எம்மில் எவருக்கும் இல்லாத வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.

எனவே எதிர்வரும் தேர்தல்களில், வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என நான் முன்மொழிகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதன்போது பதிலளித்த இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தனித்துப் போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் அது தொடர்பில் நாம் அறிவிப்போம்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இருப்பின் அவர்களைச் சந்தித்து பொருத்தமானவர்களா இல்லையா என்பது தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply