
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்கரையில் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மன்னார், மூன்றாம்பிட்டியில் தனது சகோதரனுடன் தங்கியிருந்த கீர்த்தனா (வயது-22) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சகோதரனுடன் தங்கியிருந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார் எனக் கூறப்படுகின்றது.
இவர் கடந்த வியாழக்கிழமை மன்னார் ஆடைத் தொழிற்சாலை பணி முடிந்து மன்னார் பஸ் தரிப்பிடத்துக்குச் சென்றுள்ளார். அவர் ஆண் ஒருவருடன் உரையாடியவாறு செல்லும் காட்சி, பஸ் தரிப்பிடத்தில் உள்ள பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.
அன்று மாலை 7 மணியளவில் பெண் ஒருவர் மன்னார் பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்தார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது. பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து தேடுதல் நடத்தியபோதும் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கீர்த்தனாவே பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம் என்று தற்போது நம்பப்படுகின்றது.
கோந்தைப்பிட்டி கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், பெண்ணின் தாயும், சகோதரரும் நேற்று சடலத்தை அடையாளம் காட்டினர்.
பெண்ணின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை என்று தெரிவித்த பொலிஸார், பெண்ணுடன் உரையாடிவாறு சென்றவர் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தனர்.





