
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் 51 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக இடைநிறுத்தப்படுகின்றன.
சுத்திகரிப்பு நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கச்சா எண்ணெய் நேற்றுடன் தீர்ந்துள்ளதை அடுத்தே இன்றுடன் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுகின்றபோதும், அடுத்த 15 நாள்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்கும். முன்னர் கொள்வனவுக் கட்டளை வழங்கப்பட்ட பல சுத்திகரிப்பு எண்ணெய்த் தாங்கிகள் அடுத்த சில வாரங்களில் இலங்கை வந்தடையும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொழிற்சங்க வாதியான ஆனந்த பாலித, அமைச்சர் மற்றும் அரசின் மோசமான நிர்வாகத்தாலேயே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் .
இது ஆசியாவின் மிகவும் பழமையான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். 1961ஆம் ஆண்டு செயற்பட ஆரம்பித்த இந்த சுத்திகரிப்பு நிலையம் ஆசியாவின் அழியாத சுடர் என்று அழைக்கப்பட்டது. 51 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக இந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவுள்ளது. இது மிக மோசமான சூழ்நிலையாகும்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை இல்லை. நாட்டுக்குத் தேவையான கச்சா எண்ணெயைக் கொண்டு வருவதற்கான கப்பல்களுக்கும் பற்றாக்குறை இல்லை. சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடுத்த இறக்குமதி டிசெம்பர் மாதம் 23ஆம் திகதியே நடைபெற இருக்கின்றது. அப்போது கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்படும்= என்றும் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.





