இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உண்மையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தவில்லை! றொகான் ராஜ்குமார்

இலங்கை மனித உரிமை ஆணைக் குழு அதன் ஊழியர்களையும் நிர்வாகிகளையும் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கும் மட்டுமே செயற்படுகின்றதே தவிர உண்மையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தவில்லை என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில், இன்று காலை பத்து மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

‘அரச ஊழியர்கள் நாட்டிற்கு சுமை’ என்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கருத்தினை, வன்மையாக கண்டிக்கின்றோம்

நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் ஆட்சியாளர்களுமே நாட்டு மக்களுக்கு சுமையாக இருந்துள்ளார்கள் என்பதன் விளைவே இன்று நாடு பின்நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என்பதை நினைவு கூருகின்றோம்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் நாடு தழுவியரீதியில் இருக்கக்கூடிய புகையிரத கடவைகளில் பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட 2064 ஊழியர்களில் பலர் இலங்கை பொலிசாரினால் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள்
இன்று வரை தொழில் உரிமை மறுக்கப்பட்டு இலங்கை தொழிலாளர் சட்டத்திற்கு முரணான விதத்தில் பொலிசாரின் கீழ் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றோம்

இவ் விடயத்தினை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்ய முழுமையான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்ட போதும் ஜனாதிபதி, பிரதமர் வாக்குறுதிகளை நாங்கள் நம்பி இருந்தோம்.

ஆனால், 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் எமக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊழியர்களுக்கான நிதந்தர ஊழியம் வழங்கப்பட்டு நீதி நிலை நாட்டப்படும் என உறுதியாக எதிர்பார்த்திருந்தோம்.

மீண்டும் நாங்கள் வஞ்சிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது கடந்த 8 ஆண்டுகளாக 250 ரூபாவில் எங்கள் வாழ்க்கை செலவினை கொண்டு நடத்தி நாட்டு மக்களுக்கு சேவை செய்த எங்களை இந்த அவல நிலைக்கு முன்னாள் மகிந்த ராஜபக்ச அரசு தள்ளிவிட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக மகிந்த ராஜபக்ச ,பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி இணைப்பாளர்,நாமால் ராஜபக்ச போன்றோர் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, நாங்கள் இன்று அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

எங்களுக்கு தீர்வு வழங்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகும் நாட்டின் தொழிலாளர்களை இழிவாக கதைப்பதற்கு அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை.

நாட்டை இந்த நிலமைக்கு பின்தள்ளி விட்டு தங்கள் அரசியல் தேவைகளுக்காக மக்களையும், அரச சக்கரத்தினையும்,அரச ஊழியர்களையும் இழிவாக கதைப்பதை நிறுத்த வேண்டும்.

மேலும் 2022 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் எமக்கான நிலையான நிதியினை ஒதுக்கி புகையிரத திணைக்களத்திற்குள் எங்களுக்கு நிதந்தர நியமனம் வழங்கவேண்டும்.

இந்த நாட்டில் சுயநலம்மிக்கவர்கள் அதிகமாக வாழ்வதன் காரணமாக இந்த நாடு அதாளபாதாளத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றது.

மக்கள் அனைவரும் தங்கள் சுயநலத்தினை மறந்து நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக குரல்கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு இடம்பெறுகின்ற பழிவாங்கல்கள் அச்சுறுத்தல்கள் மனித உரிமை மீறல்கள் அடிப்படை தொழில் உரிமை மீறல்கள் தொடர்பில் பலதரப்பட்ட முறைப்பாடுகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ச்சியாக பதிவு செய்துள்ளோம்.

இலங்கை மனித உரிமை ஆணைக் குழு அதன் ஊழியர்களையும் நிர்வாகிகளையும் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கும் மட்டுமே செயற்படுகின்றதே தவிர உண்மையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தவில்லை என்றும் பகிரங்கமாக கூறுகிறேன் என மேலும் தெரிவித்துள்ளார.

Leave a Reply