வடக்கு கிழக்கு ஆயர் பேரவை மாவீரர் தினத்தை மாற்றியமைக்க முயல்வது உண்மையிலேயே கேலிக்கூத்தான விடயமாகும். ஆகவே, இதை மாற்றியமைக்காது அன்றையதினம் ஆயர் பேரவையும் ஒன்றிணைந்து மாவீரர் நாளை கொண்டாட வழிவகுக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இழஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தமிழ் தேசத்தினுடைய வரலாற்றில் எம் இனத்துக்காகப் போராடி மரணித்தவர்களுடைய வரலாற்று நாள் கார்த்திகை 27 ஆம் திகதி. அன்றைய தினத்தை மாற்றியமைக்கக் கூடிய சக்தியாக வடகிழக்கு ஆயர் பேரவை முனைந்துள்ளது.
கார்த்திகை மாதம் 2ஆம் திகதி இறந்த ஆத்மாக்களுக்காக கத்தோலிக்கர்கள் திருவிழா ஒன்றை கொண்டாடுகின்றார்கள். எனினும், அதே மாதத்தில் தேசியத்தின் பால் எமக்காகப் போராடி மரணித்த மாவீரர்களின் நாளாக கார்த்திகை 27 ஆம் திகதி, 40 வருடங்களாக நாம் அனுஸ்டித்து வருகின்றோம்.
இது கடந்த காலங்களிலும் தொடர்ந்து வருகின்றது. அதே நாளிலே, இதே கத்தோலிக்க பாதிரியார்கள், அருட்சகோதரிகள், ஆயர்கள் அஞ்சலி செலுத்தி வந்துள்ளார்கள்.
ஆனால், வடகிழக்கு ஆயர்கள் காரத்திகை 20 ஆம் திகதி அனைவரையும் மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரம், பல எதிர்ப்புகளுக்கு பின் கத்தோலிக்கர்களை மட்டும் தான் அழைத்தோம் என தெரிவித்திருந்தார்கள்.
கத்தோலிக்கர்கள் கார்;த்திகை 02 ஆம் திகதி தங்களுடைய திருவாலயங்களிலே கொண்டாடுவார்கள். மீண்டும் ஒரு நாள் கொண்டாடுகின்றார்கள் என்பது, சிலவேளை, எங்களுடைய தமிழ்த் தேசத்துக்காக உயிரிழந்த மாவீரர்களினுடைய நினைவுநாளை வேறு ஒரு சக்தியினூடாக அழிப்பதற்காகத் தான் இந்த அறிவித்தலை விடுத்திருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே, தமிழ் மக்களுடைய இந்தப் போராட்ட வாழ்க்கையிலேயே பல அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் எங்களுடைய இனத்திற்கான போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்தவர்கள்.
அப்படி இருக்கக் கூடிய இந்த வடக்கு கிழக்கு ஆயர் பேரவை இந்த தினத்தை மாற்றியமைக்க முயல்வது உண்மையிலேயே கேலிக்கூத்தான விடயமாகும். இதற்குபின் ஏதும் சக்திகள் இயங்குகின்றதா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
வரலாற்றுத் திகதியை மாற்றியமைத்து 20 ஆம் திகதியை கோருவது பொருத்தமற்ற விடயமாகும்.
ஆகவே, இதை மாற்றியமைக்காது கார்த்திகை 27 ஆம் திகதி எமது தேசத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களை அஞ்சலி செலுத்த தடை எழுப்பாது, அன்றையதினம் ஆயர் பேரவையும் ஒன்றிணைந்து எங்களுடைய மாவீரர் நாளை கொண்டாட வழிவகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
பஸ்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க பொலிஸ் சதி திட்டம்






