200 கோடி முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வை ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி’ எனக்கூறி கேவலப்படுத்திய ஞானசார தேரரை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட எம்.பியுமான ரிஸாத் பதியுதீன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த நாட்டிலே தனியார் சட்டங்களை சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம், மதம், கலாசாரம் தொடர்பில் உள்ளன.
அதேப்போன்று, தேச வழமை சட்டம், கண்டிய சட்டம் போன்றவையும் உள்ளன. இவற்றை இல்லாதொழித்து ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஒன்றை கொண்டு வருவதற்காக ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லா’ எனக் கூறிய ஞான சாரதேரரை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிதுள்ளீர்கள்.
இந்த உலகில் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட 200 கோடி முஸ்லிம் மக்கள் உள்ளனர். அல்லாஹ்வை வஞ்சிப்பதை அல்லாஹ்வை ஏசுவதனை ஏற்றுக்கொள்ளாத 54 முஸ்லிம் நாடுகள் உள்ளன.
அவ்வாறிருக்கையில் ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ்’ எனக்கூறிய ஒரு குற்றவாளியை முன்னாள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை செயலணியின் தலைவராக நியமித்ததன் நோக்கம் என்ன?
அல்லாஹ்வை கேவலப்படுத்திய ஒருவரை நியமித்ததன் மூலம் நீங்கள் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்? இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களை மிரட்டலாம் என்று நினைக்கின்றீர்களா?
இந்த நியமனத்தால் சிங்கள மக்கள் சந்தோசப்படுவார்கள் என்று நினைக்கின்றீர்களா? சிங்களவர்கள் கூட இந்த நியமனத்தை ஏற்கவில்லை.
9 வருட காலம் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்சவின் அதிகாரங்களை அவர் பிரதமராக இருக்கும் இந்;த இரண்டு வருட ஆட்சியில் பலாத்காரமாக பிடுங்கி எடுத்து விட்டீர்கள். அவர் எத்தனையோ புரட்சிகளை செய்தார். அவருடன் நாம் பக்கபலமாக இருந்து செயற்பட்டோம்.
ஆனால், இந்த இரண்டு வருட ஆட்சியில் சண்டித்தனமாக எமது உரிமைகளை பறிக்கின்றீர்கள். நான் சிறையில் இருந்த போது எனக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளைக்கூட இந்த சபையில் ஓர் இனத்தின் மக்கள் தலைவனாக கூறுவதற்கு நீங்கள் அனுமதிக்க வில்லை.
எனது குரலை அடக்கினீர்கள். இவ்வாறான செயல்கள் மூலம் உங்களால் இந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்க முடியாது என்பதனை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.






