குடிநீர் இன்றி அல்லலுறும் ஒதியமலை மாதிரிக் கிராம மக்கள்!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஒதியமலை கிராம அலுவலர் பிரிவில், கடந்த 2017 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் 26 பேருக்கான வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டது.

குறித்த வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்ட காலத்தில், இங்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டவர்களுக்கு அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு, வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதோடு, மின்சாரம், வீதி, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக இரண்டு ஏக்கர் வயல் நிலங்களும் வழங்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது

இந்திலையில், குறித்த பகுதியில் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு மக்கள் குடியேறிய போதும் உரிய அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்

அனைவருக்கும் இலவச மின்னிணைப்புக்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், இறுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஒரு இலட்சம் ரூபா கடன் வழங்கப்பட்டே மின்னிணைப்புக்களை பெற்றுக்கொண்டோம்.

எமக்கு உறுதியளிக்கப்பட்டதற்கு அமைவாக இன்றுவரை குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. வீதிகள் புனரமைத்துத் தரப்படவில்லை. குடிநீர் கூட இல்லை. இதனால், இங்கு குடிவந்த அரைவாசி பேர் இங்கிருந்து சென்றுவிட்டனர்.

இங்கு அரைவாசி வீடுகளில் மக்கள் வசிப்பதில்லை. காணிகள் காடுகள் சூழ்ந்துள்ளன காட்டு யானைகள் அட்டாகாசம் அதிகரித்து, வீடுகளில் வாழமுடியாத அச்ச சூழலில் வாழ்கிறோம்.

எனவே எமக்கான அடிப்படை வசதிகளை செய்துதருமாறு குறித்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், வீதிகளை புனரமைத்து அனைத்து மக்களும் குடியேறக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி வீடுகளை பயனுள்ளதாக மாற்றி, அச்ச சூழலில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோருகின்றனர்.

Leave a Reply