மாணவனுக்கு காய்ச்சல் எனக்கூறி வீட்டிற்கு துரத்தி அதிபர் அடாவடி! யாழில் சம்பவம்

காய்ச்சல் எனக்கூறி அதிபரும், ஆசிரியரும் மாணவன் ஒருவனை வீட்டிற்கு துரத்திய சம்பவம் ஒன்று யாழ். அராலி மேற்கில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் 4ஆம் வகுப்பில் கல்விபயிலும் மாணவன் கடந்த 8ஆம் திகதி பாடசாலைக்கு செல்லவில்லை.

09, 10ஆம் திகதிகளில் சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த மாணவன் கடந்த 11ஆம் திகதி வழமைபோல பாடசாலைக்கு சென்றிருந்தார்.

வகுப்புக்கு சென்ற மாணவனை நீ கடந்த 8ஆம் திகதி புதுமனைப் புகுவிழாவிற்கு சென்றியா? இடும்பன் பூசைக்கு சென்றியா? என அதட்டிய வகுப்பாசிரியர் சக இன்னொரு மாணவனை அழைத்து இவனுக்கு காய்ச்சல் என அதிபரிடம் கூறு என அதிபரிடம் அனுப்பி வைத்தார்.

அந்த மாணவனும் ஆசிரியர் சொன்னதை அதிபரிடம் கூறியவேளை, அதைக்கேட்ட அதிபர் குறித்த மாணவனை திட்டியவாறு வீட்டுக்கு ஓடு என விரட்டியடித்தார்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவன் அழுதவாறு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.

அந்த மாணவனது தந்தை அவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தவேளை, தனது மகன் அழுதபடி வீதியால் நடந்து வருவதை அவதானித்தார். அவனிடம் நடந்ததை விசாரித்த தந்தை மாணவனை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு சென்றார்.

பாடசாலைக்கு சென்ற தந்தை, அதிபரிடம் இது குறித்து வினவினார். அதற்கு அதிபர், உனது மகனுக்கு காய்ச்சல் எனக்கூறினார்.

இதைக்கேட்ட தந்தை காய்ச்சல் என்றால் காய்ச்சல் பார்க்கும் கருவியை எடுத்து எனது மகனை இப்பொழுதே பரிசோதியுங்கள், எனது தொலைபேசி இலக்கம் வகுப்பாசிரியரிடம் உள்ளது.

அப்படி காய்ச்சல் என்றால் கூட எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு எனக்கு தகவல் தெரிவித்திருக்கலாம்.

ஆனால், எனது மகனுக்கு காய்ச்சல் இல்லை. காய்ச்சல் என்றால் எங்களது பிள்ளையை நாங்கள் பாடசாலைக்கு அனுப்புவோமா?.

பிள்ளை பாடசாலையயில் இருக்கிறது என்று நாங்கள் இருப்போம். ஆனால் இடைநேரத்தி நீங்கள் வீட்டிற்கு துரத்திவிட்டால் வரும் வழியில் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்புக் கூறுவது? எனக்கூறினார்.

இப்போது பரிசோதிப்பதற்கு அந்தக்கருவிக்கு மின்கலம் இல்லை எனவும், உங்களது மகனது பிறப்புச் சான்றிதழை எடுத்துச் சென்று அவனை வேறு பாடசாலையில் சேருங்கள் என்றும் நாகரீகமற்ற விதத்தில் பேசி மாணவனது தந்தையுடன் அதிபர் முரண்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற தந்தை தனது மகனுக்கு நடந்த அநியாயம் தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த அதிபர் ஏனைய மாணவர்களுடனும், மாணவர்களது பெற்றோர்களுடனும் இவ்வாறு தொடர்ந்து முரண்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அதிபர் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் பெற்றோர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு சட்டமூலங்களில் சபாநாயகர் கைச்சாத்து!

Leave a Reply