தொடர்ச்சியாக சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சமையல் எரிவாயுவைப் பெற இன்றும் (17) மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்றமையை அவதானிக்க முடிந்தது.
புத்தளம், பாலாவி, கற்பிட்டி மற்றும் மதுரங்குளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள் இழுத்து மூணப்பட்டுள்ளதுடன், “சமையல் எரிவாயு இல்லை” என்ற பதாதைகளும் தொங்க விட்டுள்ளனர்.
இதனால், சமையல் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக , வரும் மக்கள் ஏமாற்றத்துடனேயே வீடுகளுக்கு திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
புத்தளம் பகுதிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்ற மதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையத்தில் மாத்திரம் சமையல் எரிவாயு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், புத்தளம் , கற்பிட்டி, கருவலகஸ்வெவ, முந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக முச்சர வண்டி, மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றில் ஒவ்வொரு நாளும் நேரகாலத்துடன் வருகை தந்து வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இன்னும் சிலர், 1000 ரூபாவுக்கும் கூடுதலாக பணத்தைக் கொடுத்து, முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி 2720 ரூபா சமையல் எரிவாயுவைப் பெற வருகை தருகின்றனர்.
வாரத்தில் ஒருமுறையே சமையல் எரிவாயு தமக்கு விநியோகிக்கப்படுவதாகவும் இதனாலேயே சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பிரதேச விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முழுமையாக நிரப்பப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வரும் லொறி எமது விற்பனை நிலையங்களை வந்தடைந்தவுடன் மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு செல்கின்றனர்.
இதனால், விற்பனை நிலையத்திற்கு கிடைக்கும் சமையல் எரிவாயுக்கள் ஒரே நாளிலேயே முடிவடைந்து விடுவதாகவும் சமையல் எரிவாயு பிரதேச விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், சமையல் எரிவாயு உற்பத்தி 4 நாட்கள் தடைப்பட்டதான் காரணமாக நாடளாவிய ரீதியில் இவ்வாறு சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வந்ததாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க நேற்று (16) தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சமையல் எரிவாயுவின் விநியோகம் இன்று முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனவும், இன்றிலிருந்து எரிவாயுவுக்கு தட்டுப்பாடு வராது எனவும் குறிப்பிட்டிருந்தார்.






