மசகு எண்ணெயை தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கான திட்டமொன்றை, சுத்திகரிப்பு பிரதான அலுவலகம் தயாரித்துள்ளது என பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, சுத்திகரிப்பு நிலையம் செயலிழப்பதற்கான காரணம் தொடர்பில், பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
”சுத்திகரிப்பு இருந்தால் தான் எமது இறைமை பாதுகாக்கப்படும். மசகு எண்ணெயை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்றை சுத்திகரிப்பு பிரதான அலுவலகம் தயாரித்துள்ளது.
இவ்வாறு திட்டமொன்று உள்ளமை தொடர்பில் நாம் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.
இவ்வாறு செய்வதால் நவம்பர் 15 ஆம் திகதி அளவில் எட்டு தாங்கிகளில் மசகு எண்ணெய் தேங்கும் என கூறினோம்.
எனினும், அமைச்சரால் இதனை செயற்படுத்த முடியவில்லை. தற்போது பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு இது மாறியது.
அதன் பிரதிபலனாகவே அந்த சுத்திகரிப்பு மசகு எண்ணெய் இல்லாமல் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவது அதனை விற்பதற்கான ஒரு படிமுறையென தெரிவித்தனர்.
அத்துடன், எரிபொருள் சுத்திகரிப்பை மீண்டும் மேற்கொள்வதற்கு தேவையான எரிபொருளை விரைவில் பெற்றுத்தருமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
இதேவேளை, பெட்ரோலிய பொது ஊழியர் சங்கம், வணிக கைத்தொழில் மற்றும் முற்போக்கு சேவை சங்கத்தின் பெட்ரோலியக் கிளை உள்ளிட்ட தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.






