ஆர்ப்பாட்டங்களுக்கு ஏன் அஞ்சுகின்றது இந்த அரசு? – ஹக்கீம் கேள்வி

ஏன் அரசு ஆர்ப்பாட்டங்களுக்குப் பயப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவை 7 மூளைகளைக் கொண்டவர் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்கும்போது வரவு – செலவுத் திட்டத்தை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளவே முடியும் என்றும், அவர்களுக்குக் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு கிராம அபிவிருத்திக்காக நிதி வழங்கப்படுகின்றது. அதன்மூலம் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்.

தொற்றுப் பரவலைப் பயன்படுத்தி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்து தனிமைப்படுத்தி அரசு வாங்கிக் கட்டிக்கொண்டது. ஏன் அரசு ஆர்ப்பாட்டங்களுக்குப் பயப்பட வேண்டும்?

விஞ்ஞானபூர்வமற்ற தீர்மானங்களின் மூலம் இரசாயன உரத்தைத் தடுத்தனர். எதிர்வரும் பெரும்போகத்தின் பின்னர் அதன் நிலைமையை அறிந்துகொள்ள முடியும்.

அடுத்தவொரு நடவடிக்கையாகவே முஸ்லிம்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் முறை தொடர்பான தீர்மானம் அமைந்துள்ளது. இப்போதும் கூறலாம். நீரின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பது விஞ்ஞானபூர்வமற்றதே.

இந்நிலையில், இப்போதும் உடல்களை இரண்டு நாட்களை கடத்தி ஓட்டமாவடிக்குக் கொண்டு செல்கின்றனர்.

இதனை இப்போதாவாது நிறுத்துங்கள். இருட்டில் தடவிக்கொண்டிருப்பதில் இருந்து வெளியே வருவோம். பிரதமர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் இப்போதாவது அந்தத் தீர்மானத்தை இரத்துச் செய்யுங்கள்.

இறுதியில் மாற்று வழியாக சடலங்களை மாலைதீவுக்கு கொண்டு செல்லவும் முயற்சித்தனர். அங்கு அவற்றை அடக்கம் செய்வதற்கு யோசனை முன்வைத்த அரசே இது.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற செயலணிக்கு வைராக்கியம், குரோதத்தை கொட்டும் பிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்மூலம் இந்த நாட்டில் நல்லிணகத்தைச் செய்ய முடியுமா?. இனங்கள் மற்றும் மக்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் நாட்டின் சிறுபான்மை இனங்களைத் தூரப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடுமாறு கேட்கின்றேன்” – என்றார்.

Leave a Reply