
( ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த உலக நீரிழிவு தின விழிப்புணர்வு வீதி நடைபவனி (16.11.2021) கல்முனை நகரத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணனின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பி. அப்துல் வாஜித், தொற்றா நோய் பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் என்.ரமேஸ், வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பிரிவினர், பணிமனையில் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
‘நீரழிவு நோய்க்கான சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த வீதி விழிப்புணர்வு நடைபவனி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் ஆரம்பமாகி பொலிஸ் நிலைய வீதியூடாக சென்று கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து கல்முனை பிரதான சந்தை ஊடாக மீண்டும் சுகாதாரப் பணிமனையை வந்தடைந்தது.
இதன்போது நீரிழிவு நோயிலிருந்து பொதுமக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. எமது நாட்டில் நான்காவது ஆட்கொல்லி நோயாக நீரழிவு நோய் காணப்படுகின்றது. தற்காலத்தில் உலகம் முழுவதும் 463 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
நீரழிவு நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் புகைப்பிடித்தல் போன்ற செயற்பாடுகள் பற்றியும் இங்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டன.





