கல்முனையில் தனியான நகர சபை வேண்டும்! சந்திரசேகரம் ராஜன்

கல்முனை மாநகரசபையின் பாரபட்சமான நிலை நீடித்தால் தனியான நகரசபைக்காக நாங்களும் போராட வேண்டிய நிலையேற்படும் : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.

முஸ்லிங்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழும் கல்முனை மாநகரில் மாநகர முதல்வரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வியெழுப்பினால் ஒலி வாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிடுகிறார். இந்த நிலை நீடித்தால் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

புதன்கிழமை (17) மாலை கல்முனை தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்முனை மாநகரசபையினால் தடுத்து நிறுத்தப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலான விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. தனிப்பட்டவர்களுடன் கொண்ட கோபத்தின் காரணமாக கல்முனைக்கு வரும் அபிவிருத்திகளை தடுத்துக்கொண்டிருக்கிறார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்காக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளரினால் கல்முனை 12ஆம் வட்டாரத்தில் உள்ள பொதுமயான சுற்றுமதில் அமைக்க 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பிரதேச செயலகத்தினால் அதற்கான முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுவரும் சூழ்நிலையில் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கல்முனை முதல்வர் மற்றும் ஆணையாளர் அதற்கான அனுமதிகளை வழங்காமல் தமக்கு சாதகமானவர்களின் அரசியல் இருப்புக்காக இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். அரச அதிகாரியான ஆணையாளர் அரசியல்வாதியை போன்று செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. கல்முனை தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியை விரும்பாதவர்களுக்கு கல்முனை முதல்வர் சாதகமாக செயற்படுகிறார்.

பொதுமயான சுற்றுமதில் அமைக்கும் பணிகளை கிராம அபிவிருத்தி சங்கம் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு ஆரம்பித்துள்ள போது மாநகர சபையினால் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கடந்த சபை அமர்வில் நான் கேள்வியெழுப்பினேன். அப்போது முதல்வர் அவரது ஒலிவாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிட்டார். இந்த நிலை நீடித்தால் பிரதேச செயலக போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் எதிர்காலத்தில் எங்களுக்கான தனியான நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என்றார்.

Leave a Reply