தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை திருநாளான இன்று, தீபத்திருநாளை குழப்பும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மக்கள் கவலை தெரிவித்தனர்.
செல்வம் பெருக துன்பம் அகல வாழ்வு சிறக்க வேண்டி தமிழ் மக்கள் வீடுகளின் முன்பாகவும் , தமது தொழில் நிலையங்கள் தோட்ட நிலங்கள் போன்றவற்றில் தீபம் ஏற்றி கார்த்திகை நாளை அனுஷ்டிப்பது வழமை.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வழக்கம் போன்றே இன்று இரவு 06 மணிமுதல் வாழைக்குற்றிகளில் சுடர் ஏற்றி கார்த்திகை திருநாளை அனுஷ்டித்துள்ளனர்.
இதன்போதே குழப்பமடைந்த இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் தீபம் ஏற்றிய சில வீடுகளுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை மாதத்தில் தங்களது பண்டிகைகளைக் கூட சுதந்தரமாக செய்யமுடியாத நிலையில், அச்சத்துடன் வாழவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தப்படும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் 07 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு எதிராக நினைவேந்தலுக்கு தடையுத்தரவு பெறப்பட்டு நேற்று வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






