
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் பதவியேற்ற பின்னர் இத்திணைக்களத்தின் செயற்பாடுகள் வீறுநடை போடுகின்றன.
புகழ்பூத்த கல்விமான்,இலக்கிய வித்தகர் சாமித்தம்பி சரவணமுத்துவின் புதல்வரான இவர்,தனது தந்தையைப் போன்று கலை இலக்கிய செயற்பாடுகளில் அதீத ஈடுபாடு காட்டி வருபவர்.
இவரது தந்தையார், சிறந்த தமிழாசிரியர். புகழ்பூத்த அதிபர். தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கூத்து,கும்மி, கோலாட்டம் என்பவற்றுக்கு புத்துயிரளித்தவர்.
கலை இலக்கிய துறையில் அதிக ஆர்வம் உள்ள பணிப்பாளர் நவநீதன், கவிதை, சிறுகதை,மேடை நாடகம்,தெரு நாடகம் போன்றவற்றில் கால்பதித்தவர்.
இவர் இயல்பாகவே சிறந்த பாடகர்.
தொட்ட பணிகளை, துலங்க வைக்கும் பணிப்பாளர் நவநீதன், இன,மத,பிரதேச வேறுபாடுகளை கடந்து,தமது படைப்புக்களை நூலுருவாக்கம் செய்ய முடியாதிருந்த பல படைப்பாளிகளின் நூல்களை,தேடிக்கண்டறிந்து அவற்றை அழகுற அச்சிட்டு வாசகர்களுக்கு கொடுத்தவர். தொடர்ந்தும் அவர் அதே பணியில் உற்சாகத்துடன் செயல்படுகிறார்.
காலத்தின் தேவையறிந்து,குறும்படம் தயாரித்தல்,கவிதை புனைதல்,சிறுகதை எழுதுதல் உள்ளிட்ட பல பயிலரங்குகளை திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் சிறப்புவாய்ந்த வளவாளர்களைக்கொண்டு நடாத்தியுள்ளார்.இதற்கும் ஒரு படி மேலே சென்று,கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடிக்கண்டுபிடித்து,நூறு எழுத்தாளர்களின் நூறு கதைகளை நூலுருவாக்கம் செய்து, இன்று 20.11.2021 திருகோணமலையில் வெளியீட்டு வைக்கின்றார். இது ஓர் இமாலய சாதனை.
இவருடைய பணி மேலும் சிறக்க கல்முனை நெற் மனதார வாழ்த்துகிறது.






