அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைதரசன் திரவப்பசளையினால் எவ்வித பயனும் இல்லை என வாழைச்சேனை விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ‘ நஞ்சு தன்மையற்ற நாடு’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விழிப்பூட்டல் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் , விவசாய செய்கை வேளான்மைக்காக இந்தியாவிலிருந்து அரசாங்கம் இறக்குமதி செய்த நஞ்சற்ற நனோ நைதரசன் திரவப்பசளை மூலம் இதுவரை பத்து வீதம் கூட எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என விவசாய மக்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு யூரியா இரசாயன உரத்திற்கு பதிலாக இந்தியாவிலிருந்து அரசாங்கம் இறக்குமதி செய்த நஞ்சற்ற நனோ நைதரசன் திரவப்பசளையை அறிமுகப்படுத்தல் மற்றும் பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது விவசாய இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனத்தின் நனோ நைதரசன் உர உற்பத்தியாளரான IFFCO நிறுவனத்தின் மூலம் நடைபெற்றுள்ளது.
அதன்படி, வாழைச்சேனை அடம்படிவட்டவான் கண்டத்திலுள்ள வயற்காணி ஒன்றினுள் நனோ நைதரசன் திரவப்பசளை எவ்வாறு விசிற வேண்டும் என்பது தொடர்பான செய்முறை பிரயோக பயிற்சி ஒன்றுஎட்டு நாட்களாக இடம்பெற்றுள்ளது.
எனினும், இதுவரையில் நனோ நைதரசன் திரவப்பசளை தெளிக்கப்பட்ட வேளான்மையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களால் தெளிக்கப்பட்ட வேளான்மையில் எந்தவித மாற்றமும் ஏற்படாத வகையில் ஏனைய விவசாயிகள் நாங்கள் எவ்வாறு இதனை பெற்றுக் கொண்டு எங்களது வயல் நிலங்களுக்கு பயன்படுத்துவது.
நனோ நைதரசன் திரவப்பசளையை அரசாங்கம் இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இதனை பெற்றுக் கொள்வதா இல்லை என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
நனோ நைதரசன் திரவப்பசளை தெளிக்கப்பட்ட வேளான்மையில் எந்தவித மாற்றமும் ஏற்படாத வகையில் நனோ நைதரசன் திரவப்பசளையை விவசாயகள் பெற்றுக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.
வாழைச்சேனை கமநல சேவை நிலையத்திற்குட்டபட்ட இருபத்தைந்து விவசாய கண்டத்தில் 21350 ஏக்கர் பெரும்போக விவசாய செய்கையை 4850 விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு இடம்பெற்றால் விவசாயிகள் நிலைமை கேள்விக்குறியாகவே காணப்படும்.
அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பி நாங்கள் விவசாய செய்கையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மேற்கொண்டோம்.
ஆனால் எமக்கு வழங்கப்பட்ட நனோ நைதரசன் திரவப்பசளையில் எந்தவித பயனும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே விவசாய செய்கையை திறம்பட மேற்கொள்ள அரசாங்கம் எங்களுக்கு யூரியா உரத்தினை வழங்க முன்வருமாறு விவசாயிகள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது, விவசாய சேவைகள் தலைமை அதிகாரி கலாநிதி. தருனேந்து சிங், விசேட நிபுணர் கலாநிதி.அனில் குமார், விசேட வெளிக்கள பிரதிநிதிகளான சுப்ரமணியன் மாரியப்பன் மற்றும் சிவலிங்கம் பரஞ்சோதி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






