திருமலையில் இடம்பெற்ற விபத்து! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில், பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை- மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பெண்ணொருவர், மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், மொரவெவ மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 53 வயதான எச்.பீ.சந்ராவத்தி என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் மகளின் மகன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரை பார்வையிடுவதற்காக ரொட்டவெவ கிராமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்று 20ஆம் திகதி காலை 6.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

தலையில் ஏற்பட்ட காயத்தினால் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின் தலையில் ஏற்பட்ட காயத்தில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் குறித்த பெண்ணை ஏற்றிக்கொண்டு வந்த இளைஞர் தான் மோட்டார் சைக்கிளில் ஏற்றவில்லை எனவும் தனக்கும் விபத்துக்கும் தொடர்பில்லை எனவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர், குறித்த பெண்ணை ஏற்றி வந்துள்ளதாகவும் ஆனால் அவர் பற்றிய விவரம் தெரியவில்லை எனவும் மொரவெவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இருந்தும் தூர இடத்திலிருந்து வருகை தருபவர்கள் மோட்டார் சைக்கிளில் தெரியாதவர்களை ஏற்றிச் செல்ல மாட்டார்கள் எனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply