தமிழீழ தனியரசுக்காக வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் ஆரம்பம்!!!

தமிழீழ தனியரசு அமைப்பதற்காக – தனி நாடு உருவாகுவதற்காக போராடி – சமராடி வித்தாகிப்போன மாவீரர்களை – காவிய நாயகர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. தமிழர் தேசத்தை காவல் காத்த தெய்வங்களை – மாவீரர்களை –  வீரப் புதல்வர்களை நினைவு கூர்ந்து பேரெழுச்சியுடன் மாவீரர் வாரத்தை புலம்பெயர் தேசம் எங்கும் பரந்து – விரிந்து வாழும் தமிழ் மக்கள் கடைப்பிடிக்கவுள்ளனர். தாயக மண்ணில் – தேசத்தில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு நீதிமன்றங்கள் ஊடான தடையுத்தரவை சிறிலங்கா பொலிஸார் பெற்றுள்ளனர்.

தாயக தேசமான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் முழுமையாக முடக்கப்பட்ட பின்னர், 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டது. மாவீரர் வாரத்தை நினைவுகூர முடியாதளவுக்கு நெருக்கடிகளும் – கெடுபிடிகளும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன.

நல்லாட்சி அரசு உருவான பின்னர், 2016ஆம் ஆண்டு, பகிரங்கமாக மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டது. தமிழீழ தேசத்தில் முக்கியமான மாவீரர் துயிலும் இல்லங்களில், மாவீரர் பெற்றோர்களின் கண்ணீர்க் கதறலுடன் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2017, 2018ஆம் ஆண்டுகளிலும் மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் மாவீரர் வாரம் கடைப்பிடிப்பதற்கு நீதிமன்றங்கள் ஊடான தடையுத்தரவுகள் பெறப்பட்டன. பகிரங்கமாக மாவீரர் வாரத்தை கடைப்பிடித்தவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை வைத்திருந்தவர்கள் சிறிலங்கா பொலிஸாரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழீழ தனியரசு அமைப்பதற்காக போராடி மடிந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தை 1989ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும். நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்படும். மறுநாள் நவம்பர் 27ஆம் திகதி, மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை முடிவடையும் தருணம், மாலை 6.05 மணிக்கு ஆலய மணி ஒலிக்க விடப்பட்டு, மாவீரர்களுக்கான நினைவுப்பாடலுடன், ஈகச்சுடரேற்றல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply