மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் மேல் கொத்மலை, லக்ஷபான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்னமும் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவும், லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களில் தலா 2 வான் கதவுகளும் நேற்று (5) இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதுடன், களனி கங்கை, களு கங்கை, நில்வளா கங்கை, மஹா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் பல அளவீடு நிலையங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சிறியளவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
இதனால் களனி கங்கையின் நீர்மட்டம், நாகலகம் வீதி, ஹங்வெல்ல மற்றும் க்ளென்கோர்ஸ் பகுதியில் அதிகரித்துள்ளதால் சிறிதளவு வெள்ள நிலைமையாக மாறிவருகிறது.
அவ்வாறே களு கங்கையின் நீர்மட்டம் மகுர, மில்லகந்த பகுதிகளில் அதிகரித்து வருவதால் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நில்வளா கங்கையின் நீர் மட்டம் பாணடுகம அளவீட்டு நிலையத்தில் அதிகளவில் பதிவாகியுள்ளதால் அப்பகுதியில் சிறியளவு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே படல்கம, கிரியுல்ல ஆகிய பகுதிகளில் மஹா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் தூனமலே பகுதியில் அதிகரித்து காணப்படுவதுடன் சிறிய வெள்ளம் குறித்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.