ஜனாதிபதி மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றமில்லை என்கிறார் சுரேஷ்!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும், இலங்கையின் வெளிவிகார கொள்கை பெரியளவில் மாற்றப்படவில்லை. மாற்றங்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை பாதுகாக்குமா என்ற கேள்வி எழுகின்றது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. அன்றைய தினத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையும் சமர்பிக்கப்படவுள்ளது. இதன் போது இலங்கை இதுவரை என்ன செய்தது என்பது தொடர்பில் ஆராயப்படும்.

காணாமல்போனோருக்கான அலுவலகத்தை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.

கோட்டாபய அரசாங்கம் ஜெனீவா தீர்மானங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தது.

தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். நாடு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள போது தங்களுக்கு எதிரான தீர்மானம் பாரதூரமான நிலையை ஏற்படுத்தலாம் எனக்கோரி கால அவகாசத்தை கோருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை காரணம் காட்டி இன்னும் கால அவகாசம் தாருங்கள் என்று அரசு கேட்கவுள்ளது.

ஆகவே பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு அரசு தயாராகி வருகிறது.

ஆனால் சர்வதேசத்தின் முன் இலங்கை நிறுத்தப்பட வேண்டும் என பலரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இது தவிர கோட்டா அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் எல்லாம் இலங்கை அரசுக்கு எதிராவே காணப்படுகிறது.

இதேவேளை தமிழ் தரப்பில் இருந்து ஒரு காத்திரமான ஒரு தீர்மானம் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில் ஜனாதிபதியாக தற்போது இருந்தாலும், வெளிவிகார கொள்கை பெரியளவில் மாற்றப்படவில்லை.

ற்றங்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை பாதுகாக்குமா என்ற கேள்வி எழுகின்றது.

இந்த நிலையில் இலங்கை அரசு சீன சார்பில் இருந்து வெளியே வந்தால்,இலங்கை அரசை ஏனைய நாடுகள் காப்பாற்றும் நிலை வரும்.

இலங்கை அரசாங்கத்தால் இந்திய அரசாங்கம் பலமுறை ஏமாற்றப்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் காப்பாற்றியதாக வரலாறு இல்லை.

தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இந்த சமுத்திரம் அமைதிப் பிராந்தியமாக இருக்க வேண்டுமென இந்தியா விரும்புகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனா எடுத்து இருக்கின்றது. 99 வருடங்களில் என்னென்ன நடக்கும் என்பதற்கு முத்தாய்ப்பாக சீனாவின் உளவுக் கப்பல் வந்து செல்கின்றது. இந்தியா அதனை எதிர்த்த போதும் இலங்கையால் அதனை மறுதலிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

இந்தியாவினுடைய பாதுகாப்புக்கும் நலன்களுக்கும் எதிரான நடவடிக்கைக்கு இடமளிக்க முடியாது.

இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் ரெலோ பல விடயங்களை பேசியதாக செய்தி வெளியாகி இருந்தது. நிச்சயமாக ஜெனிவா கூட்டத் தொடருக்கு பின்பாக இந்த சந்திப்பை நிகழ்த்தி இருக்கலாம்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கு முன்பே பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை தொடர்பாக நாங்கள் ஏற்கனவே கூட்டாக எடுத்த தீர்மானங்களில் இருந்து ரெலோ விலக மாட்டாது என்று நம்புகின்றேன். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *