யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் விரிவுரைகளுக்கு வரும் போது அவர்களுக்கென தனியான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அளித்த வாக்குறுதி காற்றில் கலந்து புஸ்வாணமாகிவிட்டது என்று பல்கலைக்கழக மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தனியார் விடுதி ஒன்றில் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளைச் சந்தித்து, மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது, யாழ். நகருக்கு வெளியாக அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
அங்கிருந்தவர்கள் முன்னிலையில் போக்குவரத்து அமைச்சருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்ட கல்வி அமைச்சர், உடனடியாக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கென தனியான விசேட போக்குவரத்துச் சேவையை வழங்க அமைச்சர் முன்வந்துள்ளார் எனவும், இது தொடர்பிலான அறிவுறுத்தல் வட இலங்கைப் போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார்.
எனினும், தற்போது முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, போக்குவரத்து சேவை தொடர்பில் வினவியபோது, தங்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தலும் இதுவரை கிடைக்கவில்லை என்று வட இலங்கைப் போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மாதம் 19 ஆம் திகதி கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பேராசிரியர் சிவா சிவானந்தன், பல்கலைக்கழகப் பதிவாளர், விஞ்ஞான பீடாதிபதி, மருத்துவ பீடாதிபதி, மாணவ நலச்சேவை அதிகாரிகள் ஆகியோரும் மாணவர்களுடன் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்