நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி 55 லட்ச மக்களை உணவுக்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய ராஜபக்ஷர்களை நாட்டு மக்கள் புறக்கணித்தார்கள், ஆனால் தற்போது ராஜபக்ஷர்களை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் எடுக்கப்படுகிறது என 43ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பத்தரமுல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை (5) இடம்பெற்ற புதிய லங்கா சுதந்திர கட்சி காரியாலய திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பெற்றுக்கொண்ட அரச முறை கடன்களை மீள செலுத்த முடியாது என இலங்கை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய பஷில் ராஜபக்ஷவின் தரப்பினர் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.
நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உண்மையை குறிப்பிடாமல் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யுரைத்தமை பொருளாதார நெருக்கடிக்கு தீவிரமடைவதற்கு பிறிதொரு காரணியாக உள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டது.
நாட்டின் நிதி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை,மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயற்பட்டதால் இன்று 55 லட்ச மக்கள் உணவுக்காக போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜபக்ஷர்களின் முறையற்ற அபிவிருத்தி,வரையறையற்ற வெளிநாட்டு அரசமுறை கடன்களினால் நாடு நிச்சயம் வங்குரோத்து நிலைமை அடையும் என்பதை குறிப்பிட்டதால் 2013 ஆண்டு அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டேன், 2015ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டத்தின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் முழுமைப்படுத்தபடவில்லை, இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லவில்லை. நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிமுறைகளில் நிவாரணம் வழங்கப்பட்டது.
நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பொறுப்பு கூற வேண்டும்.நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தையும்,நாட்டையும் தவறாக வழி நடத்தி முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை இலக்கு வைத்து கைதுகள் இடம்பெறுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்கி 55 லட்ச மக்களையும் உணவுக்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும் -என்றார்.