18.09.1987
கடந்த மூன்று நாள்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒருசொட்டு நீர்கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாக திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால்தான் என்னால் எதுவும் அருந்தமுடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே என்ற வேதனைதான் என் வாய்க்கு பூட்டுப் போட்டதே தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஆனால், அன்று முற்பகல் 10 மணியளவில் தலைவர் பிரபாகரன் என்னை அழைத்துவரச் சொன்னார் என மாத்தையா என்னிடம் கூறியபோது, என் நெஞ்சு பட
படவென்று அடித்துக்கொண்டது. தலைவர் மிகவும் கண்டிப்பானவர். என்ன சொல்லப்போகிறாரோ என்ற கேள்வியை எனக்குள் பலமுறை கேட்டுக்கொண்டேன். தலைவரின் அறைக்குள் பயத்துடன் சென்றேன்.
இருங்க வாஞ்சி அண்ணா என்ற அன்பான குரல் என்னை வரவேற்றது. ஆச்சரியத்தால் என் கண்கள் அகன்றுவிட்டன. சாப்பிடாத மயக்கத்தில் என் கண்களும் மயங்கிவிட்டனவா என்று, ஒரு கணம் சிந்தித்தேன். இல்லை! என் முன் இருப்பவர், தலைவர் பிரபாகரன் தான்!
நீங்க படிச்சவர், வயதில் மூத்தவர். நான் சொல்ல வேண்டியதில்லை. திலீபனில் அன்பு இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் எதுவும் குடிக்காமல், சாப்பிடாமல் இருப்பது? நீங்கள் அவரைப் பார்க்கவேண்டியவர். உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும். நான் திலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைக்கி றீர்கள்? திலீபன் என் பிள்ளையைப் போன்றவன். நானே அவனை இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதித்திருக்கிறேனென்றால் என் மனத்தைக் கல்லாக்கித்தான் அதைச் செய்திருக்கிறேன்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தேவையான மனோதிடம் திலீபனிடம் இருப்பதால்தான், உண்ணாவிரதத்தை அவன் நடத்த விரும்பியபோது நான் அதற்குச் சம்மதித்தேன். ஒவ்வொருவராக இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான் நல்லது. திலீபனுக்கு அடுத்த சந்தர்ப்பம் உங்களுக்குத் தர முயற்சிக்கி றேன். அதுமட்டும் நீங்கள் வழக்கம்போல் சாப்பிட்டு, குடித்து இருக்க வேண்டும். திலீபனை வடிவாகக் கவனித்துக்கொள்ளுங்கள். இப்போது எதையாவது குடித்து உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள் என்று கூறிய தலைவர், சொர்ணனை அழைத்து குளுக்கோசும் எலுமிச்சம் பழமும் வரவழைத்து, தானே தன் கைப்படக் கரைத்து, அந்த கிளாசை என்னிடம் நீட்டினார். எவ்வளவு கூறியபின் என்னால் எதுவும் திருப்பிக்கூற முடியவில்லை. மடமடவென்று வாங்கிக் குடித்தேன்.
திலீபனின் உண்ணாவிரதச் செய்தி இலங்கையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் அரபு நாடுகளிலிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஏன்? இந்தியாவின் தமிழகத்திலும் இந்தச் செய்தி, உணர்வு அலைகளைக் கொந்திளிக்கச் செய்தன.
© © © © ©
இன்று திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து நான் காவது நாள், அவரது உடல் மிகவும் அசதியாகக் காணப்பட்டது. பயற்றங்காயைப்போல் வாடி வதங்கி கட்டிலின்மேல் அவர் சுருண்டுகிடந்த தோற்றம் பார்ப்பவர் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைத்தது.
அப்படியிருந்தும் அவர் இன்று மக்கள் முன் உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு:

அன்பார்ந்த தமிழீழ மக்களே!
விளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழ முடியாது என்பது எனக்குத் தெரியும்.
எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர் களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறுபேர் சாவதால் எந்தவித தீங்கும் வந்து விடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன் – என்றார்.
வழக்கத்தைவிட நாடித்துடிப்பு 110ஆக அதிகரித்திருந்ததில் இருந்து அவர் உடல் நிலை பாதிப்படையத் தொடங்கிவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.
சூரியனின் கதிர்கள் பூமியெங்கும் வியாபித்திருந்தன. அவரருகே சென்று அவரின் நாடித்துடிப்பு மெதுவாகப் பரிசோதித்துக்கொண்டே சுவாசத்தையும் எண்ணுகிறேன். நாடித்துடிப்பு 120. சுவாசத்துடிப்பு 24. சாதாரண நிலையிலிருந்து மிகவும் அசாதாரணமாகக் கூடிக்கொண்டிருக்கிறது நாடித்துடிப்பு…! (நாடித்துடிப்பு சாதாரணம் 72-–80 சுவாசம் 16-–22) நான்கு நாள்களாக நீராகாரம் உட்கொள்ளாத காரணத்தினால் உடலில் திரவநிலை குறையத் தொடங்கிவிட்டதால், இருதயத்துக்கும் நுரையீரல்களுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவும், கனமும் குறையத் தொடங்கிவிட்டது.
வெகுநேரத்தின் பின் கண் விழிந்த திலீபன், எழும்புவதற்குச் சக்தியின்றி படுக்கையிலேயே கிடக்கிறார். மைதானம் சனக்கூட்டத்தினால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. சில தாய்மார் திலீபன் படுத்திருக்கும் பரிதாப நிலை கண்டு பொறுக்கமுடியாமல் விம்மி விம்மி அழுகின்றனர். கிறிஸ்தவப் பாதிரியாரும், பல வருடங்கள் சிறீலங்காச் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திர வதைகளை அனுபவித்துவரும் 1983 ஜூலையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதிகள், சிங்கள இனவாதப்பூதங்களால் கொல்லப்பட்ட சமயம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவருமாகிய அருட்தந்தை சிங்கராயர் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார்.
ஒரு துறவியாக இருந்தாலும் திலீபனின் கோலத்தைக் கண்டதும் அவர் அழுதே விட்டார். திலீபனின் கரங்களைப் பற்றி அவர் அன்போடு வருடினார். உடல் சோர்வுற்று இருந்தபோதிலும் திலீபன் அவருடன் மனம்திறந்து வெகுநேரம்வரை பேசிக்கொண்டிருந்தார். திலீபனின் பிடிவாதத்தையும் திடமானத்தையும் நன்கு அறிந்தவர் அந்தத் துறவி. அப்படியிருந்தும் திலீபன் படுத்திருக்கும் கோலத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் விசும்பினார். கொஞ்சமாவது தண்ணீர் அருந்திவிட்டு உண்ணாவிரதத்தைத் தொடருமாறு அவர் வற்புறுத்தினார். ‘பாதர்’ சிங்கராயர் மீது திலீபனுக்கு எப்போதும் மிகுந்த மதிப்பும் பாசமும் உண்டு. அப்படியிருந்தும் தனக்கே உரிய புன்முறுவலைக் காட்டி அதையே பதிலாக்கிவிட்டு அவ ரின் வேண்டுகோளுக்கு மௌனமாகினார் – திலீபன்.
© © © © ©
பாதர் சிங்கராயர் சென்ற பின் ஈரோஸ் இயக்கத் தலைவர் பாலகுமாரும், இயக்க யாழ். மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும் ‘பரா’வும் மேடைக்கு வந்தனர். எந்த இயக்கத்தவர்களானாலும் அவர்களுடன் சகஜமாகப் பேசுவதில் திலீபனுக்கு நிகர் திலீபன்தான். அவர்களும் திலீபனைத் தண்ணீராவது அருந்தும்படி வற்புறுத்தினர். ஆனால், அவர்களுக்குக் கிடைத்த பதிலும் மௌனம்தான்.
செல்வி குகசாந்தினி, திருமதி நல்லையா ஆகிய இரு பெண்கள் திலீபனுக்கு ஆதரவாக சாகும் வரையிலான உண்ணாநோன்பினை ஆரம்பித்தனர். அத்துடன் வல்வெட்டித்துறையில் 5 தமிழர்கள் ஏற்கனவே உண்ணாவிரதம் ஆரம்பித்துவிட்டனர் என பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. அன்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகர், கலாநிதி அன்ரன் பாலசிங்கம் திலீபனை வந்து சந்தித்தார். இந்திய அரசிடமிருந்தோ இந்தியத் தூதுவரிடமி ருந்தோ இதுவரை எந்தப் பதிலுமே கிடைக்கவில்லை என்று அவர் திலீபனிடம் கூறினார்.

சில நாள்களுக்கு முன் இந்திய அமைதி காக்கும் படையின் பாரபட்சமான நடவடிக்கைகளையும், சிங்கள இராணுவத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளையும் கண்டித்து ஒரு நாள் அடையாள மறியல் போராட்டம் சகல இராணுவ முகாம்களிலும் பொதுமக்களால் நடத்தப்பட்டபோது யாழ். கோட்டையின் முன்பாக அன்றைய மறியல் போராட்டத்தை முடித்துவைத்து திலீபன் பேசிய பேச்சு என் நினைவுக்கு வருகிறது.
‘‘இந்த யாழ்ப்பாணக் கோட்டையிலே சில நூற்றாண்டு களுக்கு முன் தமிழனின் கொடி பறந்தது. அந்தக் கொடியைப் போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும், ஒல்லாந்தரிடமிருந்து, ஆங்கிலேயரும் கைப்பற்றிக்கொண்டனர். ஆங்கி லேயரிடமிருந்து சிங்களவர் கடைசியில் கைப்பற்றினர். இந்தக் கோட்டையிலே மீண்டும் தமிழ்க்கொடி. அதாவது, புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அந்தத் தமிழ்க்கொடியைப் பறக்க விடுவதற்காக, ஒவ்வொருவரும் எமது உயிரை அர்ப்பணித்துக் கொண்டு வருகிறோம். அதில் என்பங்கு எப்போது? என்பதுதான் எமது கேள்வியாக இருக்கவேண்டுமே தவிர, பதவிகள் எமக்குப் பெரியதல்ல. பதவிகளைத் தேடிச் செல்பவர்கள் புலிகள் அல்ல! அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்! அந்தத் தீர்க்கதரிசனப் பேச்சுக்கு உயிர்வடிவம் கொடுப்பதற்காகத்தான்’’





