மருத்துவமனைக்கு புதிய பணிப்பாளர் – நலன்புரிச்சங்கம் எதிர்ப்பு

பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய பணிப்பாளராக மருத்துவர் திருமதி. மகேந்திரன் தயாளினி நியமிக்கப்பட்டிருந்தார். இவரின் நியமனத்துக்கு எதிராக நோயாளர் நலன்புரிச்சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எமது மருத்துவமனை கடந்த சில வருடங்களாக பௌதீக வளங்களிலும், ஆளணியிலும், மக்களுக்கான சேவை வழங்குதலிலும் துரிதமாக வளர்ச்சியுற்று வருகின்றது. பெரும்பாலும் உள்ளூர் மற்றும் புலம்பெயர் நன்கொடையாளர்களின் உதவிகள் மூலமே இந்த அபிவிருத்திகள் சாத்தியமாயின.

முன்னரெல்லாம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் , மேலதிக சிகிச்சைகளுக்காகவும், சத்திர சிகிச்சைகளுக்காகவும் யாழ்.போதனா மருத்துவமனைக்கே செல்வது வழக்கம். ஆனால் இப்போது அத்தகைய சிகிச்சைகளை இங்கேயே வழங்கக்கூடியளவுக்கு பருத்தித்துறை ஆதார மருத்துவமனை சேவை வழங்கலில் உயர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய நிலையில் திடீரென எமது மருத்துவமனைக்கு புதிய பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த நியமனத்தை நாம் வரவேற்கமுடியாத நிலையில் உள்ளோம். ஏனெனில் இப்போது பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் இதற்கு முன்னர் சாவக்சேரி மருத்துவமனைப் பணிப்பாளராகக் கடமையாற்றிய போது, அவர் மீது நிர்வாகச் சீர்கேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, விசாரணைகளையும் எதிர்கொண்டிருந்தார்.

எனவே அவ்வாறு நிர்வாகத் திறனற்ற ஒருவரை எமது மருத்துவமனைக்கு நியமித்ததனூடாக, எமது மருத்துவமனையில் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கும், சேவைகளுக்கும் இடையூறு ஏற்படலாமென அஞ்சுகின்றோம். எமது பிரதேச மருத்துவமனையின் வளர்ச்சியைத் தடுக்கவா இவ்வாறான அவசர நியமனம் மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகமும் எமக்கு எழுகின்றது.

எனவே குறித்த நியமனத்தை உடனடியாக இடைநிறுத்தி, பொருத்தமான , நிர்வாகத்திறன் மிக்கவர்களை எமது மருத்துவமனைப் பணிப்பாளராக நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply