பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நிதிச் சட்டமூல திருத்தத்தின்போது ஜனாதிபதி உறுதியளித்ததாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் நெடுங்குடியிருப்புகளில் உள்ள அனைவருக்கும் தனிவீட்டு திட்டமொன்றை அமைத்துக்கொடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் யோசனையொன்றை முன்வைத்தார்.

அரசுக்கு சொந்தமாக பெருந்தோட்டங்களில் உள்ள குடியிருப்பு தொகுதிகளில், தொழிலாளர்கள் மாத்திரமன்றி, வேறு தொழில் புரிபவர்களும் வசிக்கின்றனர் என்றும் பெருந்தோட்டங்களில் உள்ளவர்களுக்கு மாத்திரமே தனிவீடுகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டங்களில் உள்ள நெடுங்குடியிருப்புகள் பெண்களோ சிறுவர்ளோ வசிப்பதற்கு ஏற்ற சூழலை கொண்டிருப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நெடுங்குடியிருப்புகளில் உள்ள அனைவருக்கும் பெருந்தோட்டங்களில் உள்ள கைவிடப்பட்ட காணிகளில், தனி வீடுகளை அமைக்க உரித்துகளை வழங்கி அல்லது அவர்களுக்கு சலுகை கடன் அடிப்படையிலாவது குடியிருப்புகளை அமைத்துக்கொடுக்குமாறு ரோஹினி கவிரத்ன யோசனையொன்றை முன்வைத்தார்.

இதற்கு பதிலளிக்கும்போதே இவை பெருந்தோட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை அல்ல என்றும் நாடளாவிய ரீதியிலான பிரச்சினை என்றும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *