திலீபனுடன் ஆறாம் நாள் – 20.09.1987

20.09.1987
ஆறாம் நாள் அதி­கா­லை­யில் ஒரு அதி­ச­யம் நிகழ்ந்­தி­ருந்­தது. ஆம்! இன்று திலீ­பன் காலை 5 மணிக்கே படுக்­கையை விட்டு எழுந்து விட்­டார். அது­மட்­டு­மின்றி தான் சிறு­நீர் கழிக்­கப்­போ­வ­தா­கக் கூறி­னார். நாலைந்து நாள்­க­ளா­கப் படுக்­கை­யிலே கிடப்­ப­தா­லும் நீர் அருந்­தா­மல் இருப்­ப­தா­லும் அவ­ரது சலப்பை பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.

இதை அவ­ரி­டம் எப்­ப­டிக் கூறு­வது? அவ­ரின் விருப்­பத்­து­டன், அவ­ரைக் கைத்­தாங்­க­லா­கப் பிடித்து இறக்கி மேடை­யின் பின்­பக்­கம் கொண்டு சென்­றோம். பதி­னைந்து நிமி­டங்­க­ளாக வயிற்­றைப் பொத்­திக் கொண்டு மிகுந்த கஷ்­டப்­பட்­டார். அதன்­பின் ஆச்ச­ரி­யப்­ப­டு­ம­ள­வுக்­குச் சுமார் அரை லீற்றர் அள­வு சலம் போனது எனக்கு மிகுந்த அதிர்ச்­சி­யைத் தந்­தது. ஐந்து நாள்­க­ளாக எது­வும் குடிக்­கா­மல் இருக்­கும் ஒரு­வ­ரால் இது எப்­ப­டிச் சாத்­தி­ய­மாக முடி­யும்? அன்று மருத்துவ நிபு­ணர் சிவ­கு­மா­ரி­டம் இது­பற்றி மறக்­கா­மல் கேட்­டேன். அவர் எந்தப் பதி­லுமே கூறா­மல் மௌன­மாக சிரிப்பை உதிர்த்­து­விட்­டுச் சென்­றார்.

அன்று மதி­யம் எமது இத­யத்­துக்கு மகிழ்ச்­சி­யைத் தரும் ஓர் இனிய செய்தி எனது செவி­க­ளில் விழுந்­த­போது இனந்­தெ­ரி­யாத நிம்­மதி என்­னி­டம் குடி­வந்­தது. கொழும்­பி­லுள்ள இந்­தி­யத் தூது­வ­ர­கத்­தி­லி­ருந்து ஒரு முக்­கியமான நபர் இன்று வரப்­போ­கி­றா­ராம். அவர் எமது அர­சி­யல் பிரி­வி­ன­ரு­டன் திலீ­ப­னைப் பற்­றிப் பேசப் போகி­றா­ராம். என் பிரார்த்­தனை வீண்­போ­காது திலீ­ப­னின் உயிர் காப்­பாற்­றப்­ப­டப்­போ­கின்­றது. இந்­தி­யத் தூது­வ­ர­கத்­தி­லி­ருந்து யாரா­வது வரு­வ­தா­னால் நிச்­ச­ய­மாக பிர­த­மர் ராஜீவ்­காந்­தி­யின் ஆலோ­ச­னைப்­ப­டி­தான் வரு­வார்­கள். அப்­படி வரு­ப­வர்­கள் உணர்ச்சி பொங்­கும் தாய்க்­கு­லத்­தின் கண்­ணீ­ரைக் கண்­டா­வது இரங்­க­மாட்­டார்­களா? திலீ­பனை எண்­ணித் துடி­து­டித்­துக் கொண்­டி­ருக்­கும் விடு­த­லைப் புலி­க­ளின் மனங்­க­ளுக்கு அந்த ஆறு­தல் செய்தி நிச்­ச­யம் சாந்­தி­ய­ளிக்­கத்­தான் செய்­யும்.

திலீபா! நீ ஆரம்­பித்து வைத்த அகிம்­சைப் போர் எங்­க­ளது ஆயு­தங்­க­ளுக்கு மதிப்­பில்­லா­மல் செய்­யப்­போ­கி­றது போலும்? உன் அகிம்­சைப் போரி­னால் அப்­படி ஒரு நிலை எமக்கு வரு­மா­னால் அதை நாம் மகிழ்ச்­சி­யு­டன் வர­வேற்­போம். எமக்கு மட்­டும் ஆயு­தங்­களை தூக்கி கண்­ட­படி சுட்­டுத்­தள்ள வேண்­டும் என்று ஆசையா என்ன? முப்­பது வரு­டங்­க­ளாக எமது மூத்த அர­சி­யல் தலை­வர்­கள் தந்தை செல்வா’ தலை­மை­யில் முயன்று முடி­யாத நிலை­யில் எமது தமிழ்ச்­ச­மு­தா­யத்தை அழி­வி­லி­ருந்து காப்­பாற்­றத்­தானே வேறு வழி­யின்றி ஆயு­தம் ஏந்­தி­னோம்.

நாம் அகிம்­சைக்கு எதி­ரா­ன­வர்­கள் அல்­லர். ஆனால் நம் எதிரி அகிம்­சை­யைப் பற்றி ஒன்­றுமே தெரி­யா­த­வன். அவ­னுக்கு அது புரி­யா­தது. அவ­னுக்கு தெரிந்­த­தெல்­லாம் கத்­தி­யும், துப்­பாக்­கி­யுந்­தான். ஒரு­வன் கத்­தி­யை­யும், துப்­பாக்­கி­யை­யும் தன் பல­மாக எண்­ணும் போது அவ­னெ­தி­ரில் நிற்­ப­வ­னால் என்ன செய்ய முடி­யும். நீண்ட கசப்­பான அனு­ப­வங்­கள் தான் எமது கரங்­க­ளில் துப்­பாக்­கி­க­ளைத் தந்­தன. அண்­ணல் காந்தி அகிம்­சைப் போரிலே வெற்­றி­கண்­டார் என்­றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்­சைப் போராட்­டங்­கள் மட்­டும் கார­ண­மல்ல. காந்­தி­யின் போராட்­டத் தளம் இந்­திய மண்­ணிலே இருந்­தது. காந்­தி­யின் போராட்ட தளத்­திலே மனி­த­நே­யம்­மிக்க ஆங்­கி­லே­யர்­கள் இருந்­தார்­கள். ஆகவே அகிம்­சை­யைப் புரிந்­து­கொள்­வ­தற்கு அந்த வெள்­ளைக்­கா­ரர்­க­ளால் முடிந்­தது. ஆனால் நமது மண்­ணில் அப்­ப­டியா?

எத்­தனை சந்­தர்ப்­பங்­க­ளில் நமது தலை­வர்­கள் குண்­டாந்­த­டி­க­ளால் தாக்­கப்­பட்­டி­ருப்­பார்­கள்? எத்­தனை இனக்­க­ல­வ­ரங்­க­ளில் நமது இனத்­த­வர்­க­ளின் தலை­கள் வெட்­டப்­பட்டு தார் பீப்­பாய்­க­ளுக்­குள் போடப்­பட்­டி­ருக்­கும்? எத்­தனை பெண்­கள் தம் உயி­ரி­னும் மேலான கற்பை இழந்­தி­ருப்­பர்? அப்­போ­தெல்­லாம் நாம் ஆயு­தங்­க­ளையா தூக்­கி­னோம்? அகிம்சை! அகிம்சை! அகிம்சை! இந்த வார்த்­தை­கள் தான் எங்­கள் தாரக மந்­தி­ர­மாக இருந்­தது. இந்த தாரக மந்­தி­ரத்­தைத் தூக்கி எறிந்­து­விட்டு எமது கைக­ளிலே ஆயு­தங்­க­ளைத் தந்­த­வர்­கள் யார்? நாமா­கப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. அவர்­க­ளா­கத்­தான் தந்­தார்­கள். மாறி மாறி ஆட்­சிக்கு வந்த சிங்­கள அர­சு­கள்­தான் தந்­தன. தலை­வர் பிர­பா­க­ர­னின் பின்னே ஆயி­ரா­மா­யி­ரம் வேங்­கை­கள் அணி­தி­ரண்டு நிற்­ப­தற்­குக் கார­ணம் யார்? சிங்­க­ளப் பேரி­ன­வா­தம்­தான்.

இன்று காலை­யி­லி­ருந்து நல்­லூர்க் கந்­த­சாமி கோவி­லில் திலீ­பன் பெய­ரில் நூற்­றுக்­க­ணக்­கான அர்ச்­ச­னை­கள் செய்­யப்­பட்டு அவை பொது­மக்­கள் மூலம் மேடைக்கு வந்­த­வண்­ண­மி­ருந்­தன. பிற்­ப­கல் மூன்று மணி­யி­லி­ருந்து யாழ்ப்­பாண குடா­நாட்­டுக்கு வெளி­யி­லி­ருந்து சனங்­கள் பஸ்­க­ளில் வந்து குவி­யத் தொடங்­கி­னர். எங்கே பார்த்­தா­லும் மக்­கள் அலை­கள் தான்! தள­பதி கிட்டு அண்­ணா­வின் தாய், திலீ­பனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழு­த காட்சி என் நெஞ்­சைத் தொட்­டது. துரோ­கி­க­ளி­னால் வீசப்­பட்ட வெடி­குண்­டி­னால் தன் மகன் ஒரு காலை இழந்­த­போது அந்­தத் தாய் கூறிய வார்த்­தை­கள் இன்­னும் என் செவி­க­ளில் ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.

‘ஒரு கால் போனால் என்ன? இன்­னும் ஒரு கால் இருக்கு. இரண்டு கையி­ருக்கு அவன் கடைசி வரை­யும் போரா­டு­வான்…’’ போர் முனை­யில் தன் மக­னின் மார்­பில் வேல் பாய்ந்­தி­ருப்­ப­தைப் பார்த்து ஆனந்தக் கண்­ணீர்­விட்ட வீரத்­த­மிழ்த்­தா­யின் கதையை இது எனக்கு நினை­வூட்­டி­யது.

உதவி இந்­தி­யத் தூது­வர் கென், விமா­னம் மூலம் பலா­லிக்கு வந்து விட்­டா­ராம். அவ­ரு­டன் பேச்சு நடத்­து­வ­தற்­காக அன்­ரன் பால­சிங்­க­மும், மாத்­த­யா­வும் போயி­ருக்­கின்­ற­னர் என்ற செய்­தியை ‘சிறி’ வந்து சொன்­ன­போது மகிழ்ச்­சி­யால் துள்­ளிக்­கு­தித்­தேன்.

திலீ­ப­னுக்­கும் அதை தெரி­வித்­தேன். காலை­யில் சிறு­நீர் கழித்­த­தால் திலீ­பன் சற்­றுத் தெம்­பாக இருந்­தார். பேச்சு முடிந்து அதில் சாத­க­மாக முடிவு கிடைக்­கு­மா­னால். உண்­ணா­வி­ர­தத்தை நிறுத்­தி­விட்டு திலீ­பனை யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்க வேண்­டும். அங்கே அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் அவ­ருக்கு வேண்­டிய சிகிச்­சை­களை உட­ன­டி­யாக அளிக்­கத் தொடங்­கி­னால், இரண்டு மூன்று நாள்­க­ளில் திலீ­பன் வழக்­கம்­போல் எழும்பி நடக்­கத் தொடங்­கி­வி­டு­வார். இப்­படி எனக்­குள்­ளேயே கணக்­குப் போட்­டுக்­கொண்­டேன்.

இயக்க உறுப்­பி­னர்­கள் திலீ­ப­னு­டன் பேசிக்­கொண்­டி­ருந்­த­னர். அவரை சந்­திக்க வந்த மக­ளிர் அமைப்பு உறுப்­பி­னர்­கள், தம்­மைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் விம்மி விம்மி அழு­தமை என் நெஞ்­சைத் தொட்­டது. தள­பதி சூசை பிரபா, ரகு அப்பா, தள­பதி புலேந்­தி­ரன், தள­பதி ஜெனி, போன்­றோர் கண்­க­லங்கி திலீ­ப­னின் தலையை வருடி பேசி­விட்­டுச் சென்­ற­னர். அவர்­கள் போன­தும் திலீ­பன் என்னை அழைத்­தார். ‘‘கிட்­டண்­ணை­யைப் பார்க்க வேணும் போல இருக்கு…’’ என்று மெது­வா­கக் கூறும் போது அவர் முகத்­தில் ஏக்­கம் படர்ந்­தி­ருந்­தது. ஒரு கணம் எனக்கு என்ன செய்­வ­தென்றே தெரி­ய­வில்லை. கிட்­டண்ணா, குட்டி சிறி ஐயர் இவர்­கள் எல்­லா­ரும் இந்­தி­யா­வில் இருக்­கின்­ற­னர்.

திலீ­ப­னுக்கு என்ன பதில் சொல்­வ­தென்று தெரி­யா­மல் தவித்­தேன். கிட்டு அண்ணா இந்­தி­யா­வில் இருக்கின்றமை தெரி­யும். ஆனால் இந்த நிலை­யில் அவர் கிட்டு அண்­ணா­வைக் காண விரும்­பி­யமை நியா­யம்­தான். இரவு வெகு­நே­ரம் வரை பேச்­சின் முடிவு வரும் வரு­மென்று பார்த்­துக்­கொண்­டி­ருந்­தோம். ஆனால் அது வரவே இல்லை. சிறி­லங்கா நவ சம­மா­சக் கட்­சித் தலை­வர் வாசு­தேவ நாண­யக்­கார மற்­றும் அவ­ரது கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் வந்து திலீ­ப­னைப் பார்த்­து­விட்டு சென்­ற­னர்.

இரவு வெகு­நே­ரம் வரை எனக்கு தூக்­கமே வர­வில்லை. ஆனால் திலீ­பன் தன்னை மறந்து நன்­றாக உறங்­கி­னார். அவ­ரின் இரத்த அழுத்­தம் 85-–60 நாடித்­து­டிப்பு -120. சுவா­சம் – 22.

Leave a Reply