மாவீரர்களின் உள்ளங்களை கொச்சைப்படுத்துகின்ற நடவடிக்கை தொடர்கின்றது-பொன்.மாஸ்டர் கவலை!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தொடர்ச்சியாக அனுஷ்டித்துவரும் நினைவேந்தல் குழுவின் தலைவர் பொன்.மாஸ்டரின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் காலை யாழ் நல்லூரிலுள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொன்.மாஸ்டர்,

எமது குழு தியாக தீபம் திலீபனின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை கடந்த காலம் தொட்டு மெல்லிய நெருப்பின் ஊடாக முன்னெடுத்து வந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் முழு நெருப்புக்குள் இறங்கி வேலை செய்யும் படி மாநகரசபை திட்டமிட்டு இந்த நிலைமைக்கு தள்ளியுள்ளது.

எம் இனத்தவர்களே இவ்வாறான நிலைமைக்கு தள்ளியுள்ளார்கள்.இதனால் வரும் பழிக்கு அவர்களே பொறுப்பானவர்கள் என்பதை தெரியப்படுத்துகிறேன்.

ஆறு வருடங்களாக இந்த பயணத்தினை மேற்கொண்டு வருகிறோம் .வருடா வருடம் நிகழ்ச்சி நிரலினை தயாரித்து நடாத்தி வருகின்றோம்.இந்த முறை இதற்கு முன்னதாக ஒரு நிகழ்ச்சி நிரலினை முன் வைத்திருப்பது என்பது எம் இனத்திற்கு செய்கின்ற துரோகமாகும்.

இதனை ஒரு சதியாகவே பார்க்கின்றோம்.விடுதலை உணர்வுகள் மக்கள் மத்தியில் அகற்றப்பட வேண்டும் என்ற ஒரு சதி முயற்சியின் செயற்பாடாகும்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் ஆரம்பித்தன் பிற்பாடு ஒரு நினைவேந்தல் குழுவினை அமைத்து ,7 பேர் பின்னர் 15 பேர் கொண்ட குழு என்ற ரீதியில் அமைப்பது என்பது எமது தியாக மாவீரர்களின் உள்ளங்களை கொச்சைப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்.

இந்த தியாக மாவீரர்களினுள் தியாகி திலீபனின் தியாகம் வித்தியாசமான தியாகமாகும்.

ஒற்றையாட்சிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த வேளையில் இந்திய அரசு இதற்குள் தலையிட்டு சில நிபந்தனைகளை ஏற்படுத்தியிருந்த சமயம் இந்தியா கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது போன கட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் அருந்தாது உண்ணாவிரதமிருந்து தனது உயிரை மெழுகுவர்த்தி போல் உருக்கி தியாகம் செய்தவர்.

அந்த ஒரு தியாகத்தினை மக்கள் மயப்படுத்தலை பொறுக்க முடியாதவர்கள் சதி வேலைகளை மேற்கொள்வதனை இட்டு நாம் வேதனை அடைகிறோம்.ஆனால் இம்முறை எங்கள் நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்ட படி செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம் என உறுதியாகக் கூறுகின்றோம்.

ஐந்து அம்ச கோரிக்கைளில் நில ஆக்கிரமிப்பு இருக்கின்றது. இந்த நில ஆக்கிரமிப்பு குருந்தூர் மலையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த குழப்பத்தினை ஏற்படுத்தாமல் திலீபனின் இலட்சிய கனவை நிறைவேற்றுவது முதன்மை செயற்பாடாகும்.

இந்த தியாகங்கள் ஒற்றையாட்சியினை மறுக்கின்ற தியாகங்களாகவே இடம்பெற்றிருந்தன.இவ்வாறான தியாகங்களை எவர் மதிக்கிறார்களோ ,அதனை எவர் தனது கொள்கையாக ஏற்கின்றார்களோ அவர்களை எங்கள் ஏற்பாட்டின் குழுவுடன் அனுசரித்து அவர்களுடன் பயணிக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த நினைவேந்தல் எமது வரலாற்றினை பேணுவதாக இருத்தல் வேண்டும்.எதிர்கால சந்ததியினருக்கு எடுத்தியம்புவதாக இருத்தல் வேண்டும்.

போராட்டத்தில் பிரித்தாளும் முறை அன்றிலிருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆயுத மௌனிப்புக்கு பின்னர் தமிழ் தரப்பு கட்டமைப்பு தமிழ் கூட்டமைப்பு என்ற வட்டத்தில் செயற்பட்டது .

இந்த அமைப்பினை தனது கைக்குள் விழுத்தலாம் என்ற பகற்கனவு கொண்டு செயற்பட்ட இந்தியாவின் கனவு பகற்கனவாக மாறியுள்ளது. அந்த கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் அந்த பாதை பிழையானது என்று உணர்த்தி எமது இலட்சியத்திற்காக தியாகம் செய்தவர்களின் வழிமுறையினை நாங்களும் பின்பற்ற வேண்டும்.

எம்மால் இயக்கப்படுகின்ற இந்த ஏற்பாட்டுக்குழு தொடர்ந்து செயற்பாடுகளை செய்யும் .இந்த வருடம் மாவட்ட ரீதியில் பரவலாக்கி உள்ளோம் . ஒவ்வொரு மாவட்டத்திலும் திலீபனின் திருவுருவப்படம் வைத்து 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இறுதி நாளான 26 ஆம் திகதி முடிவுறுத்தப்படும்.என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply