பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பஸ்னாகொட நீர்த்தேக்கத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பஸ்னாகொட நீர்த்தேக்கத் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் 2,00,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்காக இந்த நீர்த்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் மக்களின் நீர் தேவையை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே பஸ்னாகொட நீர்த்தேக்கத் திட்டத்தை உடனடியாக மீள ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொட கூட்டு நீர் திட்டத்தின் கீழ் பஸ்னகொட நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நீர்ப்பாசன திணைக்களம் நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து வருகிறது.
உத்தேச நீர்த்தேக்கத்தின் பிரதான அணையானது அத்தனகலு ஓயாவின் கிளை நதியான பஸ்னகொட ஓயாவின் குறுக்கே கரஸ்னகொடவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இது 3.5 மில்லியன் கன மீட்டர் (MCM) நீரை சேமிக்க ஒரு கொங்கிரீட் அணையுடன் (2.5 மீ உயரம் மற்றும் 130 மீ நீளம்) கட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கம்பஹா, அத்தனகல்ல, மினுவாங்கொட மற்றும் மீரிகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படும்.
பிறசெய்திகள்





