அம்பாரை மாவட்டத்தில் மகா ஓயா பிரதேசத்தில் அதிகூடிய 83.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மகா ஓயா பிரதேசத்தில் அதிகூடிய 83.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி  எம்.ஏம்.எம். அக்மல் தெரிவித்தார்.

இன்று காலை 8மணியுடன் முடிவடைந்த 24மணித்தியாலங்களுக்குள் ரூபஸ்குளத்தில் 61.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பாணம பிரதேசத்தில் 56.9 லாகுகல 46.7 தீகவாபி 45.0 அம்பாரை 39.3  அக்கரைப்பற்றில் 24.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரதேசங்களிலும் குறிப்பிட்டளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
பெய்து வரும் அடை மழையினால் மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாரை, உள்ளிட்ட பிரதேசங்களின் தாழ் நில பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
 வீதிகளும் குடியிருப்புக்களும்; வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 இரு தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று காலை வரை நீடித்து வரும் நிலையில் சில குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளது.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் தாழ் நிலப்பகுதிகளும் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ள நிலை தொடர்பில் பிரதேச செயலகமும் பிரதேச சபையும் கண்காணித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply