மகா சங்கத்தினரை பொறுமை காக்குமாறு மொட்டுக் கட்சி ஆலோசனை!

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டின் நலனுக்காக சிறிது காலம் பொறுமை காக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரை இன்று வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று பௌத்த பிக்குகளை போதி மரங்களை சுற்றி எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்து போதி பூஜைகளில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பௌத்த விகாரைகள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் பௌத்த மதகுருமார்கள் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் ஒரு நாட்டுக்கு பொருளாதார ரீதியில் ஆதரவளிக்கும் போது, ​​அந்த நாடு பல நிபந்தனைகளுக்கு உள்ளாக வேண்டும் எனவும் கூறிய அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை தற்போது புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

நாட்டிற்குள் தேசிய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பாமல் கடன் அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு செல்லும் போது நாடும் மக்களும் பொருளாதார ரீதியாக சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

“மக்களின் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்.”

அண்மைய நாட்களாக மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், விகாரைகளின் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வணக்கத்துக்குரிய மகாசங்கத்தினரும் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

“இது அரசாங்கம் விருப்பத்துடன் செய்யும் காரியம் அல்ல என்பதை நாங்கள் எங்கள் மகா சங்கத்தினருக்கு மரியாதையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இனி வரும் காலங்களில் மீண்டும் விளக்குகள் மூலம் போதி பூஜைகள் செய்ய முடியும். அதுவரை நாட்டின் நலனுக்காக பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply