திரிபோஷாவில் விஷம் கண்டறிவு மீள சேகரிக்கும் பணிகள் தீவிரம்

நாட்டில் சிறுகுழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான வழங்குவதற்காக சுகாதார மருத்துவ அதிகாரிகள் பணிமனைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட திரிபோஷவை அதனைத் தயாரிக்கும் நிறுவனங்களை மீண்டும் சேகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மாதம்பையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாடளாவிய ரீதியில் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரிபோஷாவில் அடங்கியிருக்க வேண்டிய அளவைவிட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த விளைவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கான திரிபோஷ உணவில் அதிகளவான நச்சுத்தன்மை வாய்ந்த மூலம் பொருள் அடங்கியிருந்தமை தெரியவந்ததை அடுத்தே விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.

அதனையடுத்து  பகிர்ந்தளிக்கப்பட்ட திரிபோஷாவை மீள சேகரிப்பு பணியை ஆரம்பிக்குமாறு  திரிபோஷ தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறான நச்சுக்கலந்த திரிபோஷாவை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் – என்றார்.
இதேவேளை குறித்த குற்றச்சாட்டை  நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Leave a Reply