வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை; விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.அரச அதிபர் கோரிக்கை

போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் போதனா வைத்தியசாலை சமூகமாகிய நாம் இன்று போதைப் பொருள் விநியோகம் மற்றும் பாவனைக்கு எதிரான நடவடிக்கையை வலியுறுத்தி போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து எங்களது அலுவலகத்தில் முடிவுறும் வகையில் ஒரு விழிப்புணர்வு நடை பயணப் பிரசாரத்தினை மேற்கொண்டிருந்தோம்.

நாம் அறியக்கூடியது போதைப்பொருள் விநியோக வலையமைப்பு, போதைப் பொருள் விநியோகம், இளம் சமுதாயத்தைப் போதை பொருளுக்கு அடிமையாக்குதல் போன்ற சமூக அழிப்பு செயற்பாடுகள் மிகப்பெரிய அளவில் இடையூறின்றி எமது பிராந்தியத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் சந்ததியினரே குறிவைக்கப்படுகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும், சிகிச்சை அளிக்கப்படும் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. இளைஞர் யுவதிகளின் வளமான வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் சிதைக்கப்படுகிறது. பொதுமக்களும் போதனா வைத்தியசாலை சமூகத்தினர் ஆகிய நாமும் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மீதான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமை குறித்து ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைகின்றோம். இளம் சந்ததியினரையும் நாட்டினையும் காப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்துகின்றோம்.

1.போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முப்படைகளையும் உடனடியாக வலியுறுத்துதல்.

2.போதைப் பொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை வழங்குவோரை பாதுகாப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல்.

3.போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை தயக்கமின்றி வழங்க அதிபர்கள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதலும், அவர்களைப் பாதுகாத்தலும்.

4.போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு உதவியளித்தலும், ஊக்கப்படுத்துதலும்.

5.போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்குவதும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தலும் மேற்குறிப்பிட்ட எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, தாமதிக்காது சகல தரப்பினரையும் உள்வாங்கி மிகப் பாரதூரமான போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளியை கொண்டு வருவீர்கள் என திடமாக நம்புகின்றோம்.

அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சில கலந்துரையாடல்களை செய்திருக்கின்றோம். இது கூட்டு முயற்சியாக செய்யப்பட வேண்டிய விடயம்.

குறிப்பாக கல்வி திணைக்களம், சுகாதார திணைக்களம், ஏனைய சமூக நிறுவனங்கள் என்பன இணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் பெற்றோர் பிள்ளைகளில் கூடுதலான அக்கறை எடுத்து செயற்பட வேண்டும். சிறைச்சாலைகளுக்கும் ஒவ்வொரு வாரமும் சென்று 6 உளவள ஆலோசகர்களை அனுப்பி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply