யாழில் டெங்கு நோயால் அதிக இறப்புகள் பதிவு – காரணத்தை வெளியிட்ட பணிப்பாளர்!

கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக டெங்கு நோய் தொற்று குறைவாக காணப்பட்டது.குறித்த காலப்பகுதியில் கோவிட் காரணமாக,மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.இதனால் டெங்கு நோய் பரவல் குறைவடைந்து காணப்பட்டது.யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் 2548 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.8 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

கடந்த வருடங்களை விட இந்த வருடம் இறப்பு அதிமாக உள்ளது.இதற்கு காரணம் நோய் முற்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையே ஆகும்.

இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளது.அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை , 6 பிரதேச செயலர் பிரிவுகளில் இந்த விசேட வேலைத் திட்டம் முதற் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.ஆகவே மக்கள் தமது சுற்றுச் சூழலை டெங்கு நுளம்பு பெருகாத வண்ணம் தூய்மையாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply