
போதைப்பொருள் பாவனைக்குள் சிறுவர்கள் அடிமையாவதற்கு பிள்ளைகள் மீதான பெற்றோரது முறையான கண்காணிப்பின்மையே முக்கியமான காரணமாகும். பிள்ளைகளது எதிர்காலம் பெற்றோரின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இவ்வாறு யாழ்.போதனா மருத்துவமனையின் குழந்தைநல மருத்துவ நிபுணர் எஸ்.அருண்மொழி தெரிவித்தார்.
யாழ்.போதனா மருத்துவமனை சமூகத்தினரால் நேற்றுமுன்தினம் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லியான ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனைக்கு சிறுவர்கள், மாணவர்கள் இலக்குவைக்கப்படும் கலாசாரம் பரவலடைந்து வருகின்றது. மருத்துவமனையில் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிகிச்சைக்காக சேர்க்கப்படும் சிறுவர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மிகவும் அபாயகரமானதாகும்.
எந்தச் சிறுபிள்ளையும் தவறிழைக்கின்றபோது அவர்களுடைய பெற்றோரே அதற்கு பொறுப்புகூறுபவர்களாக கருதப்படும்.பிள்ளைகளைத் தண்டிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை.
பெற்றோரின் போதிய கண்காணிப்பு மற்றும் கவனயீனத்தாலேயே சிறுவர்கள் இந்தப் பிறழ்வுகளுக்கு சிக்கிசீரழிகின்றனர்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களைத் தயார்ப்படுத்துவதில் காட்டப்படும் பெற்றோரது அக்கறை பின் குறைவடைகின்றது.
பெற்றோரின் கண்காணிப்பின்மை, கட்டுப்பாடின்மையால் பிற்காலத்தில் பெற்றோருடைய கருத்துக்களுக்கும் அவர்கள் மதிப்பளிக்காது செயற்படக்கூடிய சூழ்நிலை உருவாகுகின்றது.
மனித வளர்ச்சிப் பருவத்தில் பதின்மவயதுப் பருவம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகிறது. இந்தக் காலத்தில் பெற்றோரது அன்பும் அரவணைப்பு நெருக்கமான தொடர்பும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும்.
தற்போது மாணவர்கள் கல்வித் பொதுத்தராதர சாதாரண பரீட்சையின் பின் உடை, தலைமுடி அலங்காரங்களை மாற்றியமைத்து தனியே சுற்றுவதற்கு ஆரம்பிக்கின்றனர். இதன்போது பெற்றோர்கள் அவர்கள் மீதான கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும்.
பெற்றோர்கள் இந்த சமூகத்துக்குப் பயந்தோ அல்லது அந்தஸ்துக்கு அஞ்சி பிள்ளைகளது தவறான நடத்தைகளை மூடி மறைத்து நடந்துகொள்வாராயின் பிள்ளைகளது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
ஆகவே பெற்றோர் ஒரு சிறந்த பிள்ளையை இந்தச் சமூகத்துக்கு தருவதற்கு பிள்ளை வளர்ப்பு முறைகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். – என்றார். (ச–125)





