அவுஸ்திரேலியா நோக்கி பறந்த இலங்கை அணி

கொழும்பு,ஓக் 02

உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இவர்களை வாழ்த்தி வழியனுப்பிவைக்க வீரர்களின் உறவினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்  அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருபதுக்கு 20 உலக்கிண்ணத் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது.

அவுஸ்திரேலியாவிற்கு அங்குள்ள நிலைமைகளுக்கு பழகிக் கொள்ளும் நோக்கில் இலங்கை அணி முன்கூட்டியே புறப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.

சூப்பர் 12 அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி தகுதிச் சுற்றுப்போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், அந்த போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி நமீபியாவுக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் அதிக வெற்றிகளைப் பெறும் அணி முதல் 12 அணிகளுக்கு இடையேயான சுற்றுக்கு தெரிவாகும்.

அதற்கு முன் 2 பயிற்சி போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி, பின்னர் தகுதிச் சுற்றில் 3 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை இருபதுக்கு20 அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட்,  சூப்பர் 12 அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர், 2 பயிற்சிப் போட்டிகள் தவிர, தகுதிச் சுற்றின் கீழ் தமது அணி 3 போட்டிகளில் விளையாட முடியும். இது அணிக்கு நன்மை பயக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக, இருபதுக்கு 20 பிரிவில் இலங்கை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், சூப்பர் 12 அணிகளுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. எனவே, இலங்கை அணி தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட வேண்டும், ஆனால் அது அவுஸ்திரேலிய ஆடுகளங்களுடன் பழகுவதற்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும் என்பது தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் கருத்து.

“கடந்த முறையும் நாங்கள் (ஐக்கிய அரபு இராச்சியத்தில்) தகுதிச் சுற்றில் விளையாடி போட்டிக்குள் நுழைந்தோம். அடுத்த சுற்றுக்குச் சென்றபோது, ​​அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாங்கள் மாறியதால் எங்களுக்கு ஒரு நன்மை கிடைத்தது.

துரதிர்ஷ்டவசமாக நாங்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்திடம் 2 போட்டிகளில் தோல்வியடைந்தோம். எனவே இரண்டாவது சுற்றுக்கு செல்வதற்கு இந்த 5 போட்டிகளும் நிச்சயமாக முக்கியமானவை” என  கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கிரிக்கெட் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தசுன் ஷானக தெரிவித்தார்.

எதிர்வரும் 10ஆம் திகதி மெல்போர்ன் மைதானத்தில் ஸிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது பயிற்சி போட்டியில் இணையவுள்ள இலங்கை அணி, அதன் பின்னர் 13ஆம் திகதி மெல்போர்னில் அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் பங்கேற்கவுள்ளது.

இதனையடுத்து, தகுதிச் சுற்றில் 16ஆம் திகதி நமீபியா அணியுடனும், 18ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் 20ஆம் திகதி நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது.

Leave a Reply