
நாட்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கும் அவர்கள் செலவிடுவதை ஊக்குவிக்கவும் அரசாங்கம் இரவுநேர களியாட்ட நிகழ்வுகளுக்கு புத்துயிர் அளிக்கவேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இரவுப் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இரவு வேளையில் மக்கள் வெளியில் சென்று மகிழ்ந்து அதன்மூலம் அரசாங்கத்துக்கு பணம் ஈட்டுவதே எமது நோக்கம். இல்லாவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
இரவுவேளையில் சுற்றுலாப் பயணிகள் பணத்தை செலவழிக்க எமது நாட்டில் இரவு கலாசாரம் உருவாக்கப்படவில்லை. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைப் போல் இரவு நேரத்தில் களியாட்டங்கள் பொழுதுபோக்குகள் எதுவுமில்லை.
அத்துடன் செலவழிக்கக்கூடிய வருமானம் உள்ள உள்ளூர் மக்களும் தங்கள் பணத்தை செலவழிக்க வெளிநாடுகளை நோக்கி செல்கின்றனர். இலங்கையர்களும் தங்கள் பணத்தைச் சேகரித்து அதை டொலராக மாற்றி, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளுக்குக் கொடுக்கிறார்கள்.
நாம் இரவு வாழ்க்கையை கலாசாரம் மற்றும் மதத்தோடு சம்பந்தப்படுத்துகின்றோம். நாம் அங்கேயே நின்றுகொண்டிருந்தால் நாடு வளர்ச்சியை நிலையை எட்டாது.
ஒவ்வொரு முறையும் இந்த நாடு ஏதாவது ஒரு வகையில் வளர்ச்சியடைய முயற்சிக்கும் போது, மக்கள் மதம், கலாசாரப் பிரச்சினையை முன்னிறுத்தி நாட்டை திவாலான நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.– என்றார்.





