இந்தோனேசியாவில் கால்பந்தாட்டத்தில் வன்முறை: 180 பேர் பலி: பலருக்குக் காயம்

இந்தோனேசியாவில் இடம்பெற்ற கால்பந்தாட்டமொன்றில் வன்முறை வெடித்ததை அடுத்து 180 பேர் வரையில் பரிதாபமாக உயிரிழந்தனர். உள்ளூர் அணியொன்று சொந்த மண்ணில் தோல்வியடைந்தமையால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட விரக்தியே இந்தக் கலவரத்துக்குக் காரணம் என்று தெரியவருகின்றது.

இந்தோனேசியாவில் உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் கிழக்கு ஜாவாவில் நேற்று சனிக்கிழமை நடந்த போட்டியில் அரெமா அணியும், பெர்சிபையா அணியும் மோதின.

இதில் 3:2 என்ற கோல் கணக்கில் பெர்சிபையா அணி வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் அரெமா அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கோபம் கொண்டு மைதானத்துக்குள் நுழைந்தனர். இதனால் கலவரம் வெடித்தது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுப் பிரயோகம், தடியடி ஆகியவற்றை நடத்தினர். எனினும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

ஆரம்பத்தில் மைதான வளாகத்தில் ஏற்பட்ட கலவரங்கள் பின்னர் வீதிகள், கடைகள் என்று நீடித்தன. வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டன. கடைகள் சில சூறையாடப்பட்டுள்ளன. இந்தக் கலவரத்தில் இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

வன்முறையை தொடர்ந்து இந்தோனேசியாவில் ஒருவாரத்துக்கு கால்பந்து போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறை குறித்து உடனடி விசாரணை நடத்த இந்தோனேசிய அதிபர் ஜோகோ உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply