வடக்கு மக்களுக்கு மண்ணெண்ணெய் மூலமாகவே மானியம் பெற்றுத்தர வேண்டும்! – ஜே.வி.பி வலியுறுத்து

விவசாயிகளுக்கு தேவைப்படுகின்ற மண்ணெண்ணெய்யின் விலையினை ஒரு சதம் கூட குறைக்காத இந்த ரணில் ராஜபக்ஷ, பெற்றோல் விலையினை குறைத்து மக்களுக்கு தண்ணீர் காட்டுகின்றார். வடமாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கு மானியம் வழங்க வேண்டுமாக இருந்தால் மண்ணெண்ணெய் மூலமாகவே மானியம் பெற்றுத்தர வேண்டும் என ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தெரவித்தார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 23 ஆம் திகதி ரணில் ராஜபக்ஷவினால் அதி உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது, விஷேடமாக கொழும்பு நகரத்திலே 6 பிரதான இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தினார். தற்போது அதனைமீளப் பெற்றுள்ளார்.

யுத்தம் நிறைவு பெற்று 13 வருடங்களுக்கு மேலாகியும் எங்களுடைய பிரதேசங்களில் இருக்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னமும் நீக்கப்படாது இருக்கின்றன. இந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் என்பது எங்கள் மக்களின் காணிகள், வீடுகளாக உள்ளன. இதனை இராணுவம் இன்று அபகரித்துக்கொண்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு, கொழும்பு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சட்டமும் கிடையாது. இந்த நாட்டில் இருக்க வேண்டியது ஒரே சட்டம்.

வட மாகாணத்தினை முன்னேற்றுவதற்காக தொழிற்சாலைகளோ, தொழில் வலயங்களோ அமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றி இருக்கின்றதா இந்த அரசாங்கம் என்பதை தேடி பார்க்கையில் அது எதுவுமே கிடையாது.

விவசாயிகளுக்கு தேவைப்படுகின்ற மண்ணெண்ணெய்யின் விலையினை ஒரு சதம் கூட குறைக்காத இந்த ரணில் ராஜபக்ஷ, பெற்றோல் விலையினை குறைத்து மக்களுக்கு தண்ணீர் காட்டுகின்றார்.

வடமாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கு மானியம் வழங்க வேண்டுமாக இருந்தால் மண்ணெண்ணெய் மூலமாகவே மானியம் பெற்றுத்தர வேண்டும். வட மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் மீது அன்பு இருந்தால் அதனை செய்யுங்கள். என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply