
தியாகி திலீபனின் நினைவேந்தலில் இடம்பெற்ற நிகழ்வுகள் எல்லாமே திருப்தி அளித்தாலும், தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை இந்த நிகழ்வில் வெளிப்படுத்தியதை “திலீபனின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என மூத்த போராளி திரு.பஷீர் காக்கா ஆதங்கம் வெளியிட்டு ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார்.
அந்த அறிக்கையில் ஒரு மூத்த போராளிக்கு இருக்கக் கூடிய அரசியல் ஞானம் பற்றிய விடயம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
அரசியல் நுணுக்கங்களை அறிய முடியாத ஒருவரா மூத்த போராளி திரு.பஷீர் காக்கா? என்னும் சந்தேகம் எழுகின்றது.
நிச்சயம் அப்படி இருக்க முடியாது. ஆனால், முன்னணியின் அரசியலை சிதைக்க வேண்டுமென்றே திரு.பஷீர் காக்கா இட்டுகட்டப்பட்ட கதைகளை நிறுவ முயல்வதுதான் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது.
”தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நடைபெற்ற நல்ல விடயங்கள் அனைத்தும் வரவேற்பதாக கூறிக்கொண்டு, தமது பக்கத் தவறாலேயே முழு குழப்பமும் ஏற்பட்டதை மறைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் திரு.பஷீர் காக்கா .
“பொத்துவிலில் இருந்து பகிரங்கமாக விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் ஆகுதியாகிய திலீபனின் ஊர்தி புறப்பட்டது மகிழ்ச்சியே” எனக்கூறிய திரு.பஷீர் காக்கா .-
தீவக நினைவேந்தல் குழுவினரும் வேலன் சுவாமியின் குழுவினரும் எப்போது ஊர்தி பவனியை ஆரம்பித்தனர்?, யாருக்கு போட்டியாக ஆரம்பித்தனர்? என்ற உண்மையையும் அந்த அறிக்கையில் பேசியிருக்கலாம்.
இறுதி நாள் ஊரெழுவில் இருந்து நினைவேந்தல் கட்டமைப்பு ஊர்தி பவனியை ஆரம்பித்து காலை 8.00 மணிக்கு கிட்டு பூங்காவில் இருந்து தியாக தீபம் திலீபனின் தூபியை வந்தடையும் என முன்னதாகவே வெளிப்படுத்தியிருந்தும்கூட, கிட்டு பூங்காவில் ஒன்று சேர்ந்து ஏன் உங்களால் வரமுடியவில்லை? என்ற உண்மையையும் அவர் சொல்லியிருக்க வேண்டும்.
நினைவேந்தல் ஏற்பாட்டு குழு தியாக தீபத்தின் 12 நினைவு நாட்களிலும் அடையாள உண்ணாவிரதம் இருந்த போதும், 25 ஆம் திகதி திரு.பஷீர் காக்கா உள்ளிட்ட தரப்பினர் தனியாக அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தது சரியா? என்பது பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்.
25 ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம் குறித்து முன்னாள் போராளி ஈஸ்வரன் எம்முடன் கதைத்து, அதற்கு நாமும் இணங்கி. தூபிக்கு கிழக்குப் புறமாக அவர்களுக்காக புதிய பந்தல் அமைத்து கொடுத்த நிலையிலும், தனியாக பந்தலை திரு.பஷீர் காக்கா தரப்பு அமைத்து குழப்பியது பற்றியும் அறிக்கையில் திரு.பஷீர் காக்கா பேசியிருக்கவேண்டும். நினைவேந்தல் நாட்களில் குழப்பம் விளைவிப்பதற்காக தினமும் எமது கொட்டகைக்குள் மதுபோதையில் ஆட்களை அனுப்பி குழப்பம் விளைவிக்க படாதபாடுபட்ட உங்கள் பொதுக்கட்டமைப்பை உருவாக்க முயன்ற குழுவில் இருந்த ஆவா மற்றும் ஒட்டுக்குழுக்கள் பற்றியும் பேசியிருக்க வேண்டும்.
உங்கள் தரப்பினரின் நயவஞ்சகங்களை மறைத்து முன்னணியை சாடுவதன் உங்கள் நோக்கம் என்ன என்பதை ஊகிப்பதற்கு மக்கள் அரங்கிலேயே விட்டுவிடுகின்றோம்.பொத்துவில் – பொலிகண்டி அமைப்பினரின் உறுப்பினரான வேலன் சுவாமி 4 பெண்களை நினைவு தூபிக்குள் இறுதி நேரம் அனுப்பி குழப்பம் ஏற்படுத்தியமை பற்றியும் – இறுதி நேரத்தில் தூக்கு காவடியை வரவழைத்து வேலன் சுவாமி, மணி குழு, ஜனநாயக போராளிகள் தரப்பு இணைந்து பொதுச்சுடர் ஏற்றப்படுவதற்கு முன்பே குழப்ப முற்பட்டதையும் – அந்தவேளையில், அங்கே பொதுச்சுடர் ஏற்றுவதற்கு காத்திருந்த மாவீரரின் தந்தையான பூமிபாலன் என்பவரைத் தள்ளி விழுத்தி பொதுச்சுடர் ஏற்றுவதற்கு திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதை திரு.பஷீர் காக்கா மறைக்காமல் சொல்லியிருக்க வேண்டும்.
இதன் பின்னர் – உடனடியாக நினைவேந்தல் ஏற்பாட்டு குழு 10.48 என்ற தியாக தீபம் உயிர்நீத்த நேரத்தை கவனத்தில் கொண்டு- தாயக விடுதலை போரில் இரு கண்களையும் இரு கைகளையும் இழந்த போராளி கிட்லரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையும் திரு.பஷீர் காக்கா மறைத்திருக்கக் கூடாது. தியாகதீபம் திலீபன் உயிர்பிரிந்த நல்லூர் வடக்கு வீதியில் சம நேரத்தில் பொதுச்சுடர் ஏற்றுவதற்காக- தாயக விடுதலை போரில் இரு கைகளையும் இரு கண்களையும் இழந்த போராளி ராகவன் காத்திருந்த வேளை அதற்குள் அத்துமீறி நுழைந்த மணி குழுவின் உறுப்பினரால் 10.46 மணிக்கு தீபம் ஏற்றி குழப்பம் ஏற்படுத்தப்பட்டதையும் திரு.பஷீர் காக்கா மறைத்திருக்கக் கூடாது. வார்த்தைக்கு வார்த்தை மாவீரரின் தந்தை என தன்னை விழிக்கும் திரு.பஷீர் காக்கா , இறுதி நாளில் மாவீரர் தந்தை, போராளிகள் திட்டமிட்டே தள்ளி விழுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விடயங்கள் பற்றி இந்த அறிக்கையில் எதுவும் பேசாமல், தான் அவமானப்படுத்தப்பட்டதாக இட்டுக்கட்டப்பட்ட கதைகளைக் கூறி -குழப்பிய தரப்பினருக்கு வெள்ளையடிக்க திரு.பஷீர் காக்கா முயல்வது, எமக்கு ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் மக்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.
“எல்லாமே திருப்தி அளித்தாலும் தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை இந்நிகழ்வில் வெளிப்படுத்தியதை திலீபனின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதனை வலியுறுத்திக் கூறுகிறோம்” என கூறும் திரு.பஷீர் காக்கா , தானே அரசியல் விருப்பு வெறுப்பில் தான் செயற்பட்டிருந்தார் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திரு.பஷீர் காக்காவின் இந்த அரசியலை தியாக தீபம் திலீபனின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
“முதல் நாள் நிகழ்வை பொதுவாக நடத்துவதில் எந்த சங்கடமும் இல்லை என முன்னணியின் ஏற்பாட்டுக் குழுப் பொறுப்பாளர் பொன் மாஸ்டர் கூறியிருந்தார். அவரது தரப்பில் பெரும்பாலும் அவர் மட்டுமே திலீபனைக் கண்டிருப்பவர். இவரது வார்த்தையை நம்பி இவ்வருடம் ஆரம்ப நிகழ்வுக்குச் சென்றோம். சட்டத்தரணி சுகாஷ் வரும் வரை எல்லாமே சுமுகமாக நடந்தன. இவர் ஒலிவாங்கியை எடுத்ததும் தமது முன்னாள் சகாக்களான மாநகர மேயர் தலைமையிலான அணியினரை சாடத் தொடங்கினார்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்





